இந்த ஆண்டில் தோனி வெளிப்படுத்தியுள்ள அபார ஆட்டத்தின் பின்னணியில் உறுதுணையாக இருப்பது விராட் கோலிதான் என்று இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, 300 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள தோனி, ரன்களை குவிப்பதில் அனுபவமிக்கவர் என்று கூறியுள்ளார். அத்துடன் தோனி 9 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் என்றும், பல போட்டிகளில் இறுதி வரை விளையாடியுள்ளார் என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார். தோனி வெளிப்படுத்தியுள்ள இந்த அபார ஆட்டத்தின் புகழ் அனைத்தும் விராட் கோலியைதான் சென்றடையும் என்றும், ஏனென்றால் தோனி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அணியில் விளையாட வைத்தவர் கோலிதான் என்றும் கூறியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் தோனி 19 போட்டிகளில் 627 ரன்களை குவித்துள்ளார் என்றும், கடந்த இலங்கை, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்களில் அவர் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கங்குலி புகழ்ந்துள்ளார்.
இதேபோன்று இளம் வீரரான பாண்டியாவையும் புகழ்ந்துள்ள கங்குலி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றியில் பாண்டியாவிற்கு முக்கிய பங்குள்ளது என்று கூறியுள்ளார். பாண்டியா ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்றும், அவர் தென் ஆப்பிரிக்க வீரர் கல்லீஸ் போன்று ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் பாண்டியாவை, கல்லீஸுடன் ஒப்பிடவில்லை என்றும், கல்லீஸை போன்று 10 ஆண்டுகளுக்கு மேல் பண்டியாவும் சிறந்த ஆல்ரவுண்டராக விளையாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.