சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் என்கிற ரெக்கார்டை விராத் கோலி முறியடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான், குண்டப்பா விஸ்வநாத் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். சதமடிப்பது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது என்று முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாதனும் அதையே கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, ’கோலி நிலையாக நின்று விளையாடி சதங்களை அடித்துவருகிறார். ஒவ்வொரு சாதனையையும் உடைக்க அவருக்கு அருமையான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் 100 சதம் என்கிற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் கோலி முறியடிப்பார். அந்த விதத்தில் எனக்கு மகிழ்ச்சி. சச்சின் டெண்டுல்கருக்கே கூட அது மகிழ்ச்சியளிக்கும்.
களத்தில் விராத் கோலி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ரன் குவிக்க வேண்டும் என்கிற அவரது தாகம், ஆக்ரோஷம் அகியவற்றைப் பார்க்கும் போது அது வேறு லெவலாக இருக்கிறது. அவரது கேப்டன் பொறுப்பு பற்றி கேட்கிறார்கள். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை வேறு யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அவர் தலைமையில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போதிருக்கிற இந்திய அணி, எந்த நாட்டிலும் அந்த நாட்டு அணியை வெல்லும் திறமையை பெற்றிருக்கிறது. தோனியை பற்றி கேட்கிறார்கள். அவர் இப்போதும் டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்தான்’ என்றார்.