கோலி, ரஹானே 'அவுட்' ... சிக்கலில் இந்தியா!

கோலி, ரஹானே 'அவுட்' ... சிக்கலில் இந்தியா!

கோலி, ரஹானே 'அவுட்' ... சிக்கலில் இந்தியா!
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரஹானே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி சிக்கலில் இருக்கிறது.

சென்னையில் நேற்று இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று 600 ரன்கள் எடுத்து இங்கிலாந்து டிக்ளர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி விரைவாக எஞ்சிய விக்கெட்டுகளை இழந்து 578 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, ஷபாஸ் நதீம் தலா இரண்டு விக்கெடை எடுத்தனர்.

இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 6 ரன்களில் அவுட்டானார். விரைவாக ரன்களை சேர்த்து வந்த சுப்மன் கில்லும் 29 ரன்களுக்கு அவுட்டானார். உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்கு பின்பு கோலி 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் பெஸ் 2 விக்கெட்டை கைப்பற்றினார். இப்போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஆடுகளத்தில் ரிஷப் பன்ட் மற்றும் புஜாரா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com