பாண்டே, தோனி ஆட்டம் வீண்: கிளாசன் விளாசலில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

பாண்டே, தோனி ஆட்டம் வீண்: கிளாசன் விளாசலில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
பாண்டே, தோனி ஆட்டம் வீண்: கிளாசன் விளாசலில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Published on

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இப்போது விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இரண்டாவது போட்டி, செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அறிமுக வீரராக வேகப்பந்துவீச்சாளர் தாகூர் சேர்க்கப்பட்டார். 

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா ரன் கணக்கை தொடங்காமலேயே டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா, தவானுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். எனினும், தவான் 24 ரன்களிலும், கோலி 1 ரன்னிலும், ரெய்னா 31 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

பின்னர் வந்த மனிஷ் பாண்டே, தோனி ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு இந்திய அணி 188 ரன்கள் சேர்த்தது. பாண்டே 79 ரன்களுடனும், தோனி 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர் ஸ்மட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹென்ரிக்ஸ் 26 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கேப்டன் டுமினியும், விக்கெட் கீப்பர் கிளாசனும் அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு அடிதளம் அமைத்தனர். 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. 

3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை பெற்றுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com