டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்க் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் வெளியேற, பின்னர் கைக்கோர்த்த கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். செட்டில் ஆன பிறகு அதிரடி ஆட்டத்திற்கு திரும்பிய கேஎல் ராகுல் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என விளாசி அரைசதம் அடித்து 50 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த சூரியகுமார் யாதவ் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அதிரடி காட்ட அவரை 30 ரன்களில் பவுல்டாக்கி வெளியேற்றினார் ஷகிப் அல் ஹசன்.
பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல் என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினாலும் நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி டி20 உலககோப்பையில் தனது 13ஆவது அரைசதத்தை அடித்து அசத்தினார். இறுதியில் விராட்கோலி மற்றும் ரவி அஸ்வின் இருவரும் சிக்சர், பவுண்டரி என விளாச 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கோடு இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி ஆடிவருகிறது வங்கதேச அணி.
அதிரடி காட்டிய லிட்டன் தாஸ்
185 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். 3 ஓவர்கள் முடிவிலே அந்த அணி 30 ரன்கள் எட்டியுள்ளது. லிட்டன் தாஸ் ஆர்ஸ்தீப் சிங், பவுனேஸ்வர்குமார் ஆகியோரது ஓவர்களில் சிக்ஸர் பவுண்டரிகளை விளாசினார். அவர் மட்டுமே 11 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லிட்டன் தாஸ் சிக்ஸர், பவுண்டரிகளாக பறக்கவிட்டார். அத்துடன் வெறும் 21 பந்துகளில் அரைசதம் விளாசி இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டிவிட்டார். அனைத்து பந்துவீச்சாளர்களின் ஓவர்களையும் தெறிக்கவிட்டு வருகிறார்.