‘இப்படியே ஆடினால் அவ்ளோதான்..’ - கே.எல். ராகுலுக்கு தினேஷ் கார்த்திக் விடுத்த எச்சரிக்கை!

‘இப்படியே ஆடினால் அவ்ளோதான்..’ - கே.எல். ராகுலுக்கு தினேஷ் கார்த்திக் விடுத்த எச்சரிக்கை!
‘இப்படியே ஆடினால் அவ்ளோதான்..’ - கே.எல். ராகுலுக்கு தினேஷ் கார்த்திக் விடுத்த எச்சரிக்கை!
Published on

இந்திய அணியின் துணைக் கேப்டனும், துவக்க ஆட்டக்காரருமான கே.எல். ராகுல் சமீபகாலமாக பார்மின்றி தவித்து வரும்நிலையில், மூத்த வீரரான தினேஷ் கார்த்திக் அவரது ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கே.எல். ராகுல் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அவரது இடத்தை ஷுப்மன் கில் நிரப்பக்கூடும் என தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகிய நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி எதிர்கொண்டது. இந்தத் தொடரில் வங்கதேச அணியை, வாஷ் அவுட் செய்து இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றினாலும், ஒரு வீரராக கே.எல். ராகுல் பேட்டிங்கில் சொதப்பியது விமர்சனத்துக்குள்ளானது.

ரோகித் சர்மா இல்லாதநிலையில், துவக்க ஆட்டக்காரராக சுப்மன் கில்லுடன் களமிறங்கிய கே.எல். ராகுல் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் சேர்க்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில், 22 மற்றும் 23 ரன்கள் மட்டுமே அடித்த கே.எல்.ராகுல், தனது 2-வது டெஸ்ட் போட்டியில் 10 மற்றும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 57 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்கள், தேர்வுக்குழு உள்பட அனைவரையும் ஏமாற்றினார்.

இதேபோல் கடந்த மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டி மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் கே.எல். ராகுல் ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் அவரது பேட்டிங் சராசரி மிகவும் குறைவாக உள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட தொடரில் கே.எல்.ராகுல் இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் இந்தியா பங்குபெற, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தான் கடைசி வாய்ப்பு. இதனால் அந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கே.எல். ராகுலின் ஆட்டம் குறித்து மற்றொரு இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுலுக்கு, நான் இரண்டு போட்டிகளில் வாய்ப்புகள் வழங்குவேன், ஆனால் அந்தத் தொடரில் கே.எல்.ராகுலுக்கு சாதகமான விஷயம் நடக்கவில்லை என்றால்... அவருக்கு எதிராக கண்டிப்பாக இந்த விஷயம் நடந்தே தீரும்.

உண்மையில், அவருக்கு எதிராக இருக்கும் விஷயம் என்னவென்றால், அவர் 40 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடியுள்ளார். எனினும் அவரது சராசரி 30-களின் மத்தியில் மட்டுமே உள்ளது. ஒரு தொடக்க வீரருக்கு இவ்வளவு குறைந்த சாராசரி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 35 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக விளையாடிய இந்திய வீரர்கள் வைத்துள்ள மிகவும் குறைவான சராசரிகளில், இதுவே மிகவும் குறைந்த ஒன்றாகும்.

அவர் கண்டிப்பாக தனது திறமையை வெளிப்படுத்த ஏதாவது செய்தே ஆக வேண்டியது உள்ளது. இந்த எண்ணம் அவரது மனதிலும் இருக்கும். டெஸ்ட் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்த கே.எல்.ராகுல் விரும்பினால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு சதங்களை அடித்தே ஆக வேண்டும். இல்லையெனில், ஷுப்மன் கில் சிறப்பாக செயல்படுவதால், அவரால் இந்திய அணியில் நிச்சயமாக ஒரு மாற்றத்தைக் காணலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com