அடுத்த தோனி? கே.எல்.ராகுல் : ஒரு பார்வை  

அடுத்த தோனி? கே.எல்.ராகுல் : ஒரு பார்வை  
அடுத்த தோனி? கே.எல்.ராகுல் : ஒரு பார்வை  
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த சனிக்கிழமை அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கேப்டன், அதிரடி பேட்ஸ்மேன், பினிஷர், அபாரமான விக்கெட் கீப்பர் என பல சிறப்புகளை கொண்ட ஒற்றை வீரரான தோனி இந்திய அணியில் விட்டுச் சென்றுள்ள இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். 

தோனி ஆக்டிவாக விளையாடிக் கொண்டிருந்த போதே அவருக்கான மாற்றை உருவாக்குவது கடினமாக இருந்தது. இந்த சூழலில் தான் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான தேடுதல் ஆரம்பமானது.

ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் என இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் பலரும் அந்த இடத்திற்கு பரிசீலிக்கப்பட்டு பரிசோதனையும் செய்யப்பட்டனர். 'அந்த இடத்தை நிரப்ப சரியானவன் நான் தான்' என தன் ஆட்டத்தின் மூலம் பதில் சொல்லியுள்ளார் கே.எல்.ராகுல்.    

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக, அதிரடி ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறக்கி வெள்ளோட்டம் பார்த்தார் கேப்டன் கோலி. அவரது நம்பிக்கையை நீர்த்து போக செய்யாமல் சர்வ லட்சணங்களும் கொண்டவொரு பேட்ஸ்மேனாக ஒரு சதம், இரண்டு அரை சதம் என ரன் குவிப்பில் ஈடுபட்டு தனக்கான டாஸ்கை சிறப்பாக செய்து காட்டினார் ராகுல். 

அதோடு வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே நின்றுவிடாமல் இந்திய அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பராகவும் உருவெடுத்துள்ளார். 

எந்த இடத்தில் பேட்டிங் செய்ய அழைத்தாலும் தில்லாக விளையாடும் ராகுலை  கிரிக்கெட் ஆர்வலர்கள் அடுத்த தோனி எனவும் சொல்கின்றனர்.

கே.எல்.ராகுல்?

மங்களூருவை சேர்ந்த கே.எல். ராகுல் கர்நாடக கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக பதினேழு வயதிலேயே தேர்வாகியிருந்தார். 2010-11 சீசனில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களமிறங்கி பந்துகளை அடித்து நொறுக்கியதன் பலனாக 2010இல் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பை தொடரில் பங்கேற்று இந்தியாவுக்காக விளையாடி தன் அப்பாவின் கிரிக்கெட் கனவுக்கு உயிர் கொடுத்தார்.    

உள்ளூர் கிரிக்கெட்டை தனக்கான அடையாளமாக மாற்றிக் கொண்ட ராகுல் பேட்டிங்கில் மாஸ் மற்றும் கிளாஸாக விளையாடியுள்ளார். 

தொடர்ந்து ஐ.பி.எல் தொடரிலும் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றார். 2013-14 சீசனில் மட்டும் 1033 ரன்களை உள்ளூர் போட்டிகளில் ராகுல் குவித்திருந்தார். 2014இல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாட அறிமுகமானார். 

மெல்பேர்னில் நடந்த முதல் போட்டியில் சொதப்பிஇருந்தாலும் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் சதமடித்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது என்ட்ரியை பதிவு செய்தார் ராகுல். 

அதற்கடுத்து இந்தியாவுக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் இந்தியாவுக்காக விளையாட துவங்கினார். வெறும் இருபதே இன்னிங்ஸ் விளையாடி மூன்று கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் மூன்று சதங்கள் அடித்து புதிய உலக சாதனையை படைத்தார் ராகுல். இருந்தாலும் காயம், பார்ம் அவுட் மாதிரியான காரணங்களால் அணிக்குள்ளேயும், வெளியேயும் மங்காத்தா ஆடி வந்த ராகுலை நிலையான பார்முக்கு திருப்பியது ஐ.பி.எல் தொடர் தான். 

2018 மற்றும் 2019 ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அவரது ருத்ரதாண்டவத்தை பார்த்து அதிர்ந்துபோன இந்திய தேர்வாணையம் ராகுலை அணியிலிருந்து தவிர்பதை தவிர்த்தது. 

கடந்தாண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கான இந்திய அணியில் ராகுல் அனைத்து போட்டிகளிலுமே விளையாடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தவானுக்கு ஏற்பட்ட விரல் முறிவு ராகுலை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் காண செய்தது. வங்கதேசம் (77), இலங்கை (57), மேற்கிந்திய தீவுகள் (48) என மூன்று போட்டிகளில் சிறப்பான துவக்கத்தை கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் ராகுல். 

உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றில் தோல்வியை தழுவிய பிறகு தோனியை அணியிலிருந்து ஓரங்கட்டியதோடு இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் அவர் சொதப்பிய நிலையில் மாற்று விக்கெட் கீப்பராக கீப்பிங் வேலையையும் கவனித்தார் ராகுல். 

தவானுக்கு காயம் ஏற்பட மீண்டும் இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களத்துக்குள் இறங்கினார். இம்முறை பொறுப்புகள் அனைத்தையும் தன் தோள்களில் சுமந்த ராகுல் அந்த தொடரில் அரை சதம் மட்டுமே அடித்திருந்தாலும் இந்தியா அணிக்கான வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை ஸ்டெம்பிங் செய்த விதம் வேற லெவல்.

தொடர்ந்து நியூசிலாந்து மண்ணில் அந்த அணியை இந்தியா டி20 தொடரில் 5-0 என வெய்ட் வாஷ் செய்யவும் ராகுலின் பேட்டிங் பிரதான காரணமாக இருந்தது. தொடர்ந்து ஒருநாள் தொடரில் 0-3 என இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த சூழலிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஒரு சதம் மற்றும் அரை சதம் அடித்திருந்தார் ராகுல். 

தோனிக்கு அடுத்தபடியாக இந்திய அணிக்காக ஐந்து விக்கெட்டுகள் சரிந்த பிறகு பின்கள வீரர்களோடு பார்ட்னர்ஷிப் அமைத்து சதம் அடித்ததும் ராகுல் தான். 

‘அணிக்காக பன்னிரெண்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கினாலும் சதம் அடிக்கும் திறன் ராகுலிடம் உள்ளது’ என புகழ்ந்திருக்கிறார் இந்தியாவின் மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான தவான். 

பேட்டிங் மட்டுமல்லாது விக்கெட் கீப்பிங்கிலும் அசத்திவரும் ராகுல், கோலி சேனையின் புதிய சேனாதிபதியாக எதிரணியை அடுத்தடுத்த போட்டிகளில் துவம்சம் செய்ய உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com