பிரான்ஸ் கால்பந்துவீரர் நிகோலோ கன்டேவை, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் சந்தித்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்திய அணியின் பல வீரர்கள் கால்பந்து காதலர்கள். குறிப்பாக கேப்டன் விராத் கோலியும் கே.எல்.ராகுலும் கால்பந்தை தீவிரமாக நேசிப்பவர்கள். இந்திய அணியின் பயிற்சியில் கூட கால்பந்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இங்கிலாந்தில், பிரான்ஸ் கால்பந்து வீரர் நிகோலோ கன்டேவை சந்தித்து பேசியுள்ளார். பிரான்ஸ் கால்பந்து வீரரான கன்டே, கடந்த ஃபிபா உலகக்கோப்பையை பிரான்ஸ் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். நட்சத்திர கால்பந்துவீரரான இவர், செல்சியா அணிக்காக விளையாடி வருகிறார். இவரைச் சந்தித்து கால்பந்து உலகக்கோப்பை அனுபவங்கள் பற்றி பேசியிருக்கிறார் கே.எல்.ராகுல்.
இதுபற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ராகுல், ‘கிரிக்கெட் மற்றும் கால்பந்துபற்றி கன்டேவுடன் பேசினேன். கால்பந்தை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார். அதில் எப்படி வளர்ந்தார் என்பது பற்றியும் உலகக் கோப்பை அனுபவம் பற்றியும் பேசினோம். நான் செல்சியா அணியின் ரசிகர் இல்லை என்பதில் அவருக்கு வருத்தம். உண்மையிலேயே, எளிமையான மனிதர். மரியாதைக்குரியவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.