இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்துள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இதைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். முதல் 10 ஓவர்களுக்கு வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பின்னர் 13-ஆவது ஓவரில் இருந்து ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில், முதல் பவுண்டரி விளாசப்பட்டது. ஆட்டத்தில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா, அரைசதம் விளாசி அசத்தினார். 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் அந்நிய மண்ணில் ஆறு ஆண்டுகளுக்குப் பின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார் ரோகித் சர்மா. மறு முனையில் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.
பின்னர் வந்த புஜாரா 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் கோலியும் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்திருந்தது.