டி20 போட்டியில் விராத் கோலியை விட அதிக ஆவரேஜ் வைத்திருக்கிறார் கே.எல்.ராகுல். இருந்தும் ஆடும் லெவனில் இடம் கிடைக்க போராடி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். நேற்று நடந்த போட்டியில் தேவையில்லாத ரெக்கார்டை படைத்திருக்கிறார் ராகுல்
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக குசால் மெண்டிஸ் 38 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இதில் கே.எல்.ராகுல் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் அவுட் ஆனதுதான் ரெக்கார்ட் ஆகியிருக்கிறது.
அதாவது இலங்கை வீரர் ஜீவன் மெண்டிஸ் வீசிய பந்தை அடிக்கும் போது காலை பின்பக்கம் இழுத்தார் ராகுல். அது ஸ்டம்பில் தெரியாமல் பட, ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டி20 போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் என்ற ரெக்கார்ட்டை பெற்றிருக்கிறார் அவர். தேவையில்லாத ரெக்கார்ட்தான் என்றாலும் ரெக்கார்ட், ரெக்கார்ட்தானே!
இவரைப் போல டெஸ்ட் போட்டியில், ஹிட் விக்கெட்டில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் லாலா அமர்நாத் (1949). ஒரு நாள் போட்டியில் நயன் மோங்கியா (1995). டி20-யில் இப்போது ராகுல்!