நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார்.
அந்த அணிக்காக கேப்டன் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 49 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். படிக்கல் 21 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து கே.எஸ்.பரத் களத்திற்கு வந்தார். 16 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். கேப்டன் கோலி 39 ரன்கள் எடுத்து நரைன் சூழலில் வெளியேறினார். 12.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்களை எடுத்திருந்தது பெங்களூர் அணி.
அதன் பிறகு களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் தங்கள் விக்கெட்டுகளை தவறான நேரத்தில் இழந்தனர். நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை தக்கவைத்துக் கொள்ள தவறியது பெங்களூர்.
நான்கு ஓவர்கள் வீசிய சுனில் நரைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூர் அணியின் பேட்டிங் நம்பிக்கை நட்சத்திரங்களை கூண்டோடு காலி செய்தார். பரத், கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். ஷபாஸ் 13 ரன்களிலும், டேனியல் கிறிஸ்டியன் 9 ரன்களிலும் அவுட்டாகி இருந்தனர்.
இருபது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்திருந்தது பெங்களூர். தற்போது வெற்றிக்கான இலக்கை செஸ் செய்கிறது கொல்கத்தா. பெங்களூர் அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி வாய்ப்பை அந்த அணி தக்கவைக்கலாம். சஹால், ஹர்ஷல் பட்டேல், சிராஜ், Garton மாதிரியான பவுலர்கள் அந்த அணிக்காக சிறப்பாக பந்து வீச வேண்டி உள்ளது.