ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். டெல்லியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் அவருடன் களமிறங்கிய பிருத்வி ஷா 7 (11) ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டு நடையைக்கட்டினார்.
பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 14 (12) ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து ரிஷாப் பண்ட்டும் 14 (20) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதற்கிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் அரை சதம் கடந்து சென்றுகொண்டிருந்தார். பின்னர் வந்த ஸ்டொயினிஸ் 9 (10) ரன்களில் பெவிலியன் திரும்பினார். சிறப்பான ஒரு இன்னிங்ஸை கொடுத்த ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். இறுதிவரை அவுட் ஆகாத அவர் 61 பந்துகளில் 106 ரன்களை குவிக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது.
டெல்லி பேட்டிங்கில் தவானின் சதம் பெரும் பலம் என்றாலும், அவருடன் எந்த வீரரும் பார்ட்னர்ஷிப் கொடுக்காதது பலவீனமாக அமைந்தது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய எந்த பேட்ஸ்மேனும் அதிரடியை வெளிப்படுத்தாமல் விட்டது அணியின் ஸ்கோரை அதிகமாக உயர்த்த முடியாத நிலையை ஏற்படுத்தியது. பஞ்சாப் பந்துவீச்சில் 4 ஓவர்களுக்கு 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமியின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இருந்தது. 2 ஓவர்களை வீசிய நீஷம் 17 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். ரவி பிஷ்னாய், மேக்ஸ்வெல் என யாரும் ரன்களை வாரிக்கொடுக்காதது எட்டக்கூடிய இலக்குக்கு வழிவகுத்தது.
165 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து ஆடிய பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் கிறிஸ் கெயில் சிக்ஸர்கள், பவுண்டரிகளை விளாசி அணிக்கு நம்பிக்கையை கொடுத்தார். ஆனால் அவரும் 29 (13) விக்கெட்டை இழந்ததால் பஞ்சாப்பின் வெற்றியில் சிக்கல் வருமோ ? என்ற எண்ணத்தை உருவாக்கியது. அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் ரன் அவுட் ஆனது பஞ்சாப் அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கிடையே களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் சிறப்பான ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரது ரன் அவுட் வாய்ப்பை டெல்லி அணியினர் தவறவிட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றும் பிழையானது. அசத்தலான அரை சதம் அடித்த பூரன், 28 பந்துகளில் 53 ரன்களை குவித்துவிட்டு ரபாடா பந்துவீச்சில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.
பந்துகளைவிட குறைவான ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் மேக்ஸ்வெல் மற்றும் தீபக் ஹூடா இருந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தார். 24 பந்துகளில் 32 ரன்களை அடித்த அவர், ரபாடாவின் பந்தில் கேட்ச்சாகி சென்றார். இதையடுத்து ஹூடா மற்றும் நீஷம் ஆகிய இருவர் ஜோடி சேர, 18 பந்துகளுக்கு 14 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. 18வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்களை இவரும் அடிக்க, வெற்றி பெற 12 பந்துகளுக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. 19வது ஓவரில் அடுத்தடுத்து சில சிங்கிள் போக, நீஷம் அடித்த சிக்ஸரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி எளிமையான வெற்றியை பெற்றது.
பஞ்சாப் பேட்டிங்கில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கோட்டை விட்டாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தனர். குறிப்பாக கிறிஸ் கெயில் மற்றும் பூரன் அதிரடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. அத்துடன் மேக்ஸ்வெல் அடித்த 32 ரன்களும் அவசியமான ஒன்றாக இருந்தது.
டெல்லி பவுலிங்கில் சரியான நேரத்தில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ரபாடா பஞ்சாப்பிற்கு நெருக்கடி கொடுத்திருந்தார். 4 ஓவர்களுக்கு 27 ரன்களை கொடுத்த அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இருப்பினும் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய துஷர் 41 ரன்களை வாரிக்கொடுத்தது சொதப்பாலாக அமைந்தது. மொத்தத்தில் தோல்விகளால் சளிப்படைந்திருத்த பஞ்சாப், புள்ளிகள் பட்டியலில் டாப்பில் இருக்கும் டெல்லியை வீழ்த்தியதால் உற்சாகம் அடைந்தது. மேலும் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. அத்துடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இன்னும் கைவிட்டு போகவில்லை.