டெல்லிக்கு தொடரும் சோதனை: கடைசி பந்தில் வென்றது பஞ்சாப்!

டெல்லிக்கு தொடரும் சோதனை: கடைசி பந்தில் வென்றது பஞ்சாப்!
டெல்லிக்கு தொடரும் சோதனை: கடைசி பந்தில் வென்றது பஞ்சாப்!
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்புக்கு எதிராக நேற்றிரவு நடந்த போட்டியிலும் டெல்லி அணி பரிதாபமாகத் தோற்றது.

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது.

அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், உடல் நலக் குறைவு காரணமாக ஆடவில்லை. ஆரோன் பின்சும் கே.எல்.ராலும் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். வழக்கம் போல இந்தப் போட்டியிலும் பின்ச் ஏமாற்றினார். அவர் 2 ரன்னில் வெளியேறினார். முந்தைய போட்டிகளை விட, இந்தப் போட்டியில் டெல்லி அணி சிறப்பாக பந்து வீசியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பஞ்சாப் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக, கருண் நாயர் 34 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி தரப்பில் பிளங்கட் 3 விக்கெட்டும், அவேஷ் கான், போல்ட் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

சேசிங்கை தொடங்கிய டெல்லி அணியில் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பிருத்வி ஷா, ராகுல் திவேதியா ஆகியோர் முறையே 22, 24 ரன்கள் எடுத்து அவுட் ஆயினர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், 57 ரன்கள் எடுத்து போராடிய நிலையில், கடைசி பந்தில் சிக்சர் அடிக்கும் முயற்சியில் அவுட் ஆனார். இதையடுத்து கடைசி பந்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. 

பஞ்சாப் அணியில் அங்கித் ராஜ்பூத், முஜீப் ரகுமான், ஆண்ட்ரூ டை தலா 2 விக்கெட்டும், பரிந்தர் ஸ்ரன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த எளிதான ஸ்கோரை கூட எட்டமுடியாமல் டெல்லி அணி தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த தோல்வியின் மூலம் 6 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியுடன் டெல்லி அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
6 போட்டிகளில் 5 வெற்றியுடன் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com