தமிழ் தலைவாஸ்... தினேஷ் கார்த்திக், அஸ்வின் இன்று மோதல்!

தமிழ் தலைவாஸ்... தினேஷ் கார்த்திக், அஸ்வின் இன்று மோதல்!
தமிழ் தலைவாஸ்... தினேஷ் கார்த்திக், அஸ்வின் இன்று மோதல்!
Published on

ஐபிஎல் தொடரின் 18-வது லீக் போட்டியில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன. தமிழக கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் பஞ்சாப் அணிக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளதால் இன்றைய போட்டி மீது தமிழக ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த தொடரின் முதல் சதத்தை பதிவு செய்திருக்கிறார். சிறந்த பந்து வீச்சை கொண்ட ஐதராபாத்துக்கு எதிராக சதம் அடித்த கெயிலை மற்ற அணிகள் எச்சரிக் கையாக பார்க்கின்றன. இன்றைய போட்டியிலும் அவர் ருத்ரதாண்டவம் ஆடுவார் என எதிர்பார்க்கலாம். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், முதல் போட்டியில் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். அடுத்தடுத்தப் போட்டி களில் அவர் பிரகாசிக்கவில்லை.

மயங்க் அகர்வால், கருண் நாயர், யுவராஜ் சிங், ஆரோன் பின்ச், டேவிட் மில்லர் உட்பட பல திறமையான வீரர்கள் இருந்தாலும் யாரும் ’நின்று’ அதிரடி காட்டவில்லை. யுவராஜ் சிங் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அந்த அணி கெயிலை மட்டுமே அதிமாக நம்பி இருக்கிறது. பந்துவீச்சில் முஜீப் மிரட்டி வருகிறார். கடந்த 2 வருடத்துக்கு முன், ’நக்கிள்’ வகை பந்துவீச்சை ஐபிஎல்-லில் அறிமுகப்படுத்திய ஆண்ட்ரூ டை, ஸ்ரன் ஆகியோர் நன்றாக பந்துவீசி வருகிறார்கள். கூடவே அஸ்வினும் அமர்க்களப்படுத்தினால் பஞ்சாப்புக்குச் சாதகம்.

கொல்கத்தா அணியில், கேப்டன் தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, ஆண்ட்ரூ ரஸல் ஆகியோர் சிறப்பாக ஆடிவருகின்றனர். ஒருவர் விட்டாலும் மற்றொருவர் நின்று காப்பாற்றிவிடுகிறார்கள் அணியை. ரஸல் ’தனி  ஒருவனா’க அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் கில்லியாக இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் நரேன், பேட்டை சுழற்றுகிறார். அதிரடி, கிறிஸ் லின், இந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, நரேன், ஷிவம் மாவி, கர்ரன் ஆகியோர் சிறப்பாக ஆடிவருகின்றனர். இன்றைய போட்டியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஹீத் ஸ்டீர்க் கூறும்போது, ‘கெயில் அபாயகரமான வீரர். நிலைத்து நிற்க விட்டுவிட்டால் அவரைக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால் அவர் மீது நாங்கள் கண் வைத்திருக்கிறோம்’ என்கிறார்.

4 ஆட்டத்தில் 3 வெற்றிகளுடன் பஞ்சாப் அணி 6 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் ரன்விகித அடிப்படையில். பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. கொல்கத்தா, 5 ஆட்டங்களில், 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com