இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு முதலே இங்கிலாந்து அணியில் பீட்டர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர் ஓரங்கப்பட்டார். இதற்கு பீட்டர்சன் மீதான சர்ச்சைகளும் காரணம். அதன்பின் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், அனைத்து தொழில்முறை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன் 8 ஆயிரத்து181 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 23 சதங்கள், 35அரைசதங்கள் அடங்கும். 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன் 4 ஆயிரத்து 440 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதம், 25 அரைசதங்கள் அடங்கும். 37 டி20 போட்டிகளில் விளையாடி, 1,176 ரன்களும் சேர்த்துள்ளார். 2004ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார்.
பீட்டர்சன் முடிவுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் உள்ளிட்ட பல்வேறு வீரர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி அந்த நாட்டுக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.