கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு இந்தியாவில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டக் அலி கிரிக்கெட் தொடரில் E பிரிவில் இடம்பெற்றுள்ள கேரளா மற்றும் மும்பை அணிகள் நேற்று விளையாடின. இதில் கேரள அணிக்காக ஸ்ரீசாந்த் பந்து வீசினார். ஐபிஎல் மேட்ச் ஃபிக்சிங்கில் சிக்கி ஸ்ரீசாந்த் 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத நிலையில் இந்த தொடரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விளையாடி வருகிறார்.
இந்நிலையில் மும்பை அணியை சேர்ந்த 19 வயது இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்ரீசாந்த் பந்தை அடிக்க முயன்று அதை மிஸ் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசாந்த் பேட்ஸ்மேன் ஜெய்ஷ்வாலை ‘என்ன பந்த அடிக்க ட்ரை பண்றியா’ என கேட்பது போல முறைத்துப் பார்த்தார். அதற்கு பதில் ஏதும் சொல்லாத யாஷஸ்வி, அதே ஓவரில் ஸ்ரீசாந்த் வீசிய அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். அதோடு நிற்காமல் அதற்கடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் எடுக்கப்பட்டது.
இருப்பினும் இந்த ஆட்டத்தை கேரள அணி வென்றது. அந்த அணியின் தொடக்க வீரர் முகமது அசாருதீன் 54 பந்துகளில் 137 ரன்களை எடுத்தார். இதன் மூலம் மும்பை நிர்ணயித்த 197 ரன்களை கேரளா சுலபமாக சேஸ் செய்தது.