ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மைதானத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி மஸ்கட்டில், கேரளாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஒருவர், தன் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தார். அதில் அவர் சூப்பரான ஷாட்களை அடித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். இப்படி தொடர்ந்து அவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக தரையில் சறுக்கி விழுந்தார். அப்பொழுது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
கீழே விழுந்தவரை அருகில் இருந்த மற்றொரு வீரர் எழுப்ப முயல்கிறார். முடியவில்லை. அதற்குள் எதிர் தரப்பிலிருந்த வீரர்களும் அங்கு ஓடிவந்து அவரை எழுப்ப முயல்கின்றனர். அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த வீடியோ காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மாரடைப்பில் உயிரிழந்த அவருக்கு 38 வயது என்றும், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அவர், தொடர்ந்து உள்நாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் இதுபோன்று திடீரென சரிந்து விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ராஜஸ்தானில் பரிசோதனைக்காக மருத்துவமனையில் காத்திருந்த ஒருவர் இதுபோல் விழுந்து இறந்தார். அதுபோல் காஜியாபாத்தில் ஜிம் பயிற்சியாளர் ஒருவரும், திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய ஒருவரும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் எனவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.