வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா.. 1500 பேருக்கு பிரியாணி வழங்கி கொண்டாடிய ஓட்டல் ஓனர்!

வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா.. 1500 பேருக்கு பிரியாணி வழங்கி கொண்டாடிய ஓட்டல் ஓனர்!
வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா.. 1500 பேருக்கு பிரியாணி வழங்கி கொண்டாடிய ஓட்டல் ஓனர்!
Published on

கத்தார் நாட்டில் ஒரு மாதமாக நடந்து வந்த 2022ம் ஆண்டுக்கான FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி கடந்த டிசம்பர் 18ம் தேதி நடைபெற்றது. இதில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணி மோதின. பெனால்டி ஷூட் அவுட் வரை சென்று பிரான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்டது.

இதனையடுத்து உலக முழுவதும் உள்ள ஃபுட்பால் ரசிகர்கள் மெஸ்ஸியின் வெற்றியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் கால்பந்தாட்டத்துக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பதால் அந்த கொண்டாட்டம் இங்கும் தொடர்கிறது.

இப்படி இருக்கையில் அதே கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளரும், சவுத் அமெரிக்க அணியின் தீவிர ரசிகரான ஷிபு, அர்ஜென்டினா அணி ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியில் வெற்றிபெற்றால் 1000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படியே அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டியில் வெற்றி வாகை சூடியதால் ஷிபுவின் ஓட்டல் முன்பு சாரை சாரையாக மக்கள் பிரியாணி சாப்பிட குவிந்திருக்கிறார்கள்.

அதன்படி, திருச்சூரின் பள்ளிமூலா பகுதியில் உள்ளது ஷிபுவின் ராக்லேண்ட் ஓட்டல். அங்கு நேற்று (டிச.,19) காலை முதலே மக்கள் மிக நீண்ட வரிசையில் வந்து காத்திருந்திருக்கிறார்கள். அந்த கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததால் திகைத்துப்போன ஷிபு, கொடுத்த வாக்கை மீறாமல் வந்த அத்தனை பேருக்கும் இலவசமாக பிரியாணி வழங்கியிருக்கிறார்.

1000 பேர் என முதலில் அறிவிக்கப்பட்டதால் அந்த அளவுக்கு மட்டுமே தட்டுகள் உள்ளிட்டவை வைத்திருந்த நிலையில் கூட்டம் குவியத் தொடங்கியதால் மேலும் 500 பிரியாணிக்கும் ஏற்பாடு செய்து அசத்தியிருக்கிறார் ஷிபு.

மிக நீண்ட வரிசையில் ஷிபுவின் பிரியாணி ஓட்டலில் மக்கள் குவிந்த ஃபோட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த பிரியாணி திருவிழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷஃபி பரம்பிலும் பங்கேற்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த வெற்றிக்காக அர்ஜென்டினா ரசிகர்கள் 36 ஆண்டுகளாக காத்திருந்தார்கள்.

அந்த காத்திருப்புக்கு தற்போது தீர்வு கிடைத்திருக்கிறது. மெஸ்ஸியின் வயதை காட்டிலும் எங்கள் காத்திருப்பு அதிகமானது. தோற்றாலும் ஜெயித்தாலும் எப்போதும் நாங்கள் அர்ஜெண்டினாவின் ரசிகர்கள்தான்.” எனக் கூறியிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஓட்டல் ஓனர் ஷிபு, “3 தசாப்தங்களுக்கு பிறகு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இதனை சுவையான பிரியாணி கொடுத்து கொண்டாட எண்ணிமோம். இலவசமாக பிரியாணி வழங்குவது மனதுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com