துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்திய ரெட் அணியின் கருண் நாயர் 166 ரன்கள் விளாசினார்.
துலீப் டிராபி கிரிக்கெட் போட்டி பெங்களூரு அருகில் உள்ள அலூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா ரெட், இந்தியா புளு மற்றும் இந்தியா பச்சை அணிகள் மோதி வருகின்றன.
கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய போட்டியில், இந்திய ரெட் மற்றும் புளு அணிகள் மோதின. முதலில் ஆடிய ரெட் அணி, முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கருண் நாயர் 99 ரன்களில் ஆட்டமிழந்து, ஒரு ரன்னில் சதத்தை இழந்தார். அங்கித் கல்சி சதம் அடித்தார். அவர் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 50 ரன்கள் எடுத்தார். இந்திய புளு தரப்பில் திவேஷ் பதானியா 4 விக்கெட்டுகளும் சக்சேனா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய புளு அணி, 255 ரன்கள் எடுத்தது. பாவ்னே 121 ரன்களும் அன்மோல் பிரீத் சிங் 56 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 2 வது இன்னிங்ஸை தொடங்கிய ரெட் அணியில், கருண் நாயர் அபாரமாக ஆடி, 166 ரன்கள் குவித்தார். பின்னர் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்யப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில், ரெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஏற்கனவே இந்தியா புளு- பச்சை அணிகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக டிராவில் முடிந்தது. இந்நிலையில், ரெட்- பச்சை அணிகள் மோதும் லீக் ஆட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.