கர்நாடக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தமிழ்நாடு-கர்நாடக அணிகள் இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கர்நாடக அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக தேவ்தத் படிக்கல் 78 ரன்களும் பவன் தேஷ்பாண்டே 65 ரன்களும் அடித்தனர். தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தமிழ்நாடு அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் 113 ரன்கள் அடித்தார். கர்நாடகா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கவுதம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய கர்நாடக அணி அஸ்வின் மற்றும் விக்னேஷ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அஸ்வின் 4 விக்கெட்களையும், விக்னேஷ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனால் 181 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறி கொடுத்தது. அத்துடன் சிறப்பாக பந்துவீசிய கர்நாடக வீரர் கவுதம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தமிழ்நாடு அணி 63.3 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் தமிழ்நாடு அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணியிடம் தோல்வி அடைந்தது. ஏற்கெனவே சையத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப் போட்டிகளில் தமிழ்நாடு அணி கர்நாடக அணியிடம் தோல்வி அடைந்தது. தற்போது இந்தத் தொடர்களுக்கு பிறகு தொடங்கியுள்ள ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் தனது முதல் போட்டியில் தமிழ்நாடு அணி கர்நாடக அணியிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.