இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போல பாகிஸ்தானில், பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். நடப்பு சீசனுக்கான லீக் போட்டிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணியும், லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்திருந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு எகிறி இருந்தது.
டாஸ் வென்ற லாகூர் அணியின் கேப்டன் சோஹைல் அக்தர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தமீம் இக்பாலும், ஃபகர் ஜமானும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். பத்து ஓவர்களில் 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர் இருவரும். தமீம் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து ஃபகர் ஜமான் மற்றும் முகமது ஹஃபீஸும் பெவிலியன் திரும்பினர். ஏழு பந்துகளில் மூன்று விக்கெட்டை இழந்ததிருந்தது லாகூர்.
இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்திருந்தது லாகூர்.
தொடர்ந்து விளையாடிய கராச்சி அணிக்காக ஷர்ஜீல் கான் மற்றும் பாபர் அசாம் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். ஒருபக்கம் கராச்சி விக்கெட்டை சீரிய இடைவெளியில் இழந்து கொண்டிருக்கும் பாபர் அசாம் மட்டும் அசத்தலாக அந்த அணிக்காக ஒன்மேன் ஆர்மியாக விளையாடினார்.
49 பந்துகளில் 63 ரன்களை குவித்து கராச்சி அணியின் கோப்பை கனவை நிஜமாக்கினார் பாபர்.
18.4 ஓவரில் 135 ரன்களை எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது கராச்சி. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பாபர் வென்றிருந்தார்.
இந்த வெற்றியை அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்த தங்களது பயிற்சியாளர் டீன் ஜோன்ஸுக்கு சமர்ப்பித்துள்ளனர் கராச்சி கிங்ஸ் வீரர்கள்.