இந்திய கிரிக்கெட் அணியில் 70 சதவிகித வீரர்கள் உயர் சாதி வகுப்புப் பிரிவினரை சேர்ந்தவர்களாக இருப்பதால், இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று கன்னட நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கடந்த 4-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் சீனியர் வீரர்கள் இருந்தும், ஐபிஎல் டி20 போட்டி போன்று இந்திய அணி 41.2 ஓவரில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து விளையாடிய வங்க தேச அணி, 46 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்து முதல் வெற்றி பெற்றது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி சொதப்பி வருகிறது.
இந்நிலையில் கன்னட நடிகர் சேத்தன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு இருப்பதை போல் கிரிக்கெட்டிலும் கொண்டு வரவேண்டும் என்றும், அவ்வாறு பட்டியலின மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு மூலம் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்களின் ஆட்டத்திறன் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
70 சதவிகித வீரர்கள் உயர் சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்!
சேத்தன் குமார் தெரிவித்துள்ளதாவது, “இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் 70 சதவிகித வீரர்கள் உயர் சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் என்ன நடக்கிறது என்பதை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு முறை தென்னாப்பிரிக்கா அணியில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெள்ளையர் அல்லாத வீரர்கள் தங்கள் தேசிய அணியில் இடம் பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது. அதில், 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக அணியில் இருக்க வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக இரண்டு பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என இட ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், கிரிக்கெட்டில் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதும், அதில் ஊடகங்களின் செல்வாக்கு எவ்வளவு என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், இட ஒதுக்கீடு அமல்படுத்துவது அவசியம். இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட பட்டியலினத்தவர்கள் (SC/ST) இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சேத்தன் குமாரின் இந்தக் கருத்துக்கு கலவையான பதில்கள் கிடைத்து வருகின்றன. விளையாட்டில் வீரரின் திறமை அடிப்படையிலேயே எடுக்க வேண்டும், அதற்குப் பதிலாக விளையாட்டிலும் அரசியலை புகுத்தக் கூடாது என நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன், சூர்யகுமார் தேர்வாகாததால் அதிருப்தி!
தென் ஆப்பிரிக்காவில் மட்டுமில்லாமல் பல நாடுகளிலும் இதுபோன் இட ஒதுக்கீடு முறை இருப்பதாக மற்றொரு நெட்டிசன், நடிகர் சேத்தன் குமாருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். முன்னதாக தற்போது நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் தேர்வுசெய்யப்படாமல், ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டதால், ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #casteistbcci
இந்திய அணியில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் #casteist bcci என்று அண்மையில் ட்ரெண்டாக்கி வந்தனர். நடராஜன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்காதது ஏன் என கேள்வி எழுப்பி வந்த நிலையில், தறேபோது நடிகர் சேத்தன் குமார் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
சேத்தன் குமாரும் சர்ச்சை கருத்துகளும்
சேத்தன் குமார் என்கிற சேத்தன் அகிம்சா இதுபோன்ற கருத்துக்களை கூறுவது முதன்முறையல்ல. ஏற்கனவே, ஹிஜாப் வழக்கை விசாரித்த நீதிபதிக்கு எதிராக ட்வீட் செய்து கைதுசெய்யப்பட்டார். பின்னர், மிகப் பெரும் வெற்றிபெற்ற ‘காந்தாரா’ படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ‘பூத கோலா’ வழிபாடு, கடலோர கர்நாடகத்தில் உள்ள மக்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழிபாட்டு சடங்கு என்றும், இந்துக்களின் கலாச்சாரம் அது இல்லை என்றும் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷம் எழுப்பியதாகக் கூறி பொதுமக்களால் தாக்கப்பட்ட சில மாணவர்களுக்கு ஆதரவாகவும் சேத்தன் குமார் கருத்துக் கூறியிருந்தார்.