உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம் சன் புதிய சாதனைப் படைக்க இருக்கிறார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த மே மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இதில் லீக் சுற்று முடிந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணியும், இரண்டாம் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதிய ஆஸ்திரேலிய அணியும் தோல்வி அடைந்தன.
இதையடுத்து இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இந்தப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. உலக கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில் லை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்றைய போட்டியில், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சத்தமின்றி சாதனை படைக்க இருக்கிறார்.நடப்பு உலகக் கோப் பைத் தொடரில், 9 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன் 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 548 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரே உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை, தற்போது ஜெயவர்த்தனேவுடன் பகிர்ந்துள்ளார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் அவர் ஒரு ரன் அடித்தால் ஜெயவர்த்தனேவின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைப்பார்.
அதேபோல், இன்றையப் போட்டியில் வில்லியம்சன் சதம் அடிக்கும் பட்சத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக வலம் வருவார். மேலும், 127 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்களை அடித்தவர் என்ற சச்சின் (674) சாதனையை முறியடிப்பார்.