அணியில் இரண்டு மூன்று ஸ்டார் பிளேயர்கள் இருந்தால் போதும் கோப்பை வெல்ல என்பது மற்ற விளையாட்டுகளுக்கு வேண்டுமானால் மிகச்சரியாய் பொருந்தலாம். ஆனால் கபடியைப் பொறுத்தவரை நிலைமையே வேறு. ஒவ்வொரு சீசனிலும் யாரும் எதிர்பாராதவகையில் ஒரு இளம்புயல் புகுந்து மொத்தமாய் கணிப்புகளைக் கலைத்துப்போடும். இதை பி.கே.எல் அணி நிர்வாகங்கள் மிகத் தாமதமாகத்தான் உணர்ந்தன. ஒருகாலத்தில் சீனியர் பிளேயர்களை மொத்தமாய் வளைத்துப் போட்டு தமிழ் தலைவாஸ் முன்னெடுத்த உபாயம் சுத்தமாய் பலிக்கவே இல்லை. அதன்பிறகே இளம் வீரர்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியது அணி நிர்வாகம். ஆனாலும் 'தலைகீழாகத்தான் குதிப்போம்' என போன முறை அதே தவறை செய்து செம அடிவாங்கிய தெலுங்கு டைட்டன்ஸ். இந்தமுறை ஒரு இளம் அணியை கட்டமைக்க முயன்றிருக்கிறது. முயற்சி வெற்றி தருமா?
ஏலத்திற்கு முன்னதாக ஒரு பிரதான ரெய்டரை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது தெலுங்கு டைட்டன்ஸ். அப்போதே 'பி.கே.எல் சூப்பர்ஸ்டார் பவன் ஷெராவத்தை தான் குறி வைப்பார்கள்' எனக் கணிப்புகள் கொடிகட்டிப் பறந்தன. அதேபோல காத்திருந்து பவனை 2.6 கோடிக்குத் தூக்கியது தெலுங்கு டைட்டன்ஸ். ஐ.பி.எல் ஏலம் பார்த்தவர்களுக்கு இது குறைவானத் தொகையாகத் தோன்றலாம். ஆனால் பி.கே.எல்லைப் பொறுத்தவரை ஒரு அணிக்கான மொத்த ஏல பட்ஜெட்டே 5 கோடிகள்தான். அதில் பாதிக்கும் மேலே ஒரே ஒரு பிளேயருக்கு செலவழித்திருப்பது சொல்லும் பவனின் வொர்த்தை. அதன் காரணமாகவே மீதித் தொகைக்கு அனுபவம் இல்லாத இளம் பிளேயர்களையே எடுக்க முடிந்தது அணி நிர்வாகத்தால். ஆனால் கடந்த முறை தமிழ் தலைவாஸ் அணியில் பவனோடு இணைந்து இளம் வீரரான நரேந்தர் ஜொலித்தது போல இந்தமுறை தங்கள் அணியில் ஒரு இளம்வீரர் மிளிர்வார் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
முன்சொன்னது போல 'ஹை- ஃப்ளையர்' பவன் ஷெராவத் தான். ரெய்டர்களைப் பொறுத்தவரை ஒன்று அசுர பலத்தோடு டிபென்டர்களை முட்டித் தள்ளி பாயின்ட்களை எடுப்பார்கள். சித்தார்த் தேசாய், மணிந்தர் சிங் போன்றவர்கள் இந்த ரகம். மற்றொரு வகை ரெய்டர்கள் வேகத்தையும் ரிப்ளெக்ஸையும் கொண்டே டிபென்டர்களிடமிருந்து நழுவி பாயின்ட்களை குவிப்பார்கள். விகாஷ் கண்டோலா, நவீன் குமார் போன்றவர்கள் இந்த ரகம். மூன்றாவது ரகம் ஸ்பெஷல் வகை. பலம், வேகம் இரண்டையும் ஒருங்கே பெற்றவர்கள். அதில் முதலிடம் பவனுக்குத்தான். களத்தில் கால் வைத்தால் ஆட்டத்திற்கு குறைந்தது பத்து புள்ளிகள் உறுதி. 105 ஆட்டங்களில் 987 புள்ளிகள். சராசரி 9.4. 2018-ல் பெங்களூரு கோப்பை அடிக்க மிக முக்கியக் காரணமாய் இருந்த சூப்பர்ஸ்டார். இந்த சீசன் கேப்டனாகவும் பவன் இருப்பார் என்பதால் அவரின் வியூகங்கள் அணிக்குப் பெரும்பலம்.
பொதுவாக கார்னர் டிபென்டர் அளவுக்கு கவர் டிபென்டர்கள் பாயின்ட்கள் எடுக்கமுடியாது. கபடி டிசைன் அப்படி. ஆனால் அந்த ப்ளூப்ரின்ட்டை பொய்யாக்கிய ஒருசிலருள் பர்வேஸ் பெயின்ஸ்வாலும் ஒருவர். பி.கே.எல்லின் டாப் 10 ரெய்டர்களுள் ஒருவர். லெப்ட் கவர் டிபென்டர்களில் இன்றைக்கு சந்தேகமே இல்லாமல் பெஸ்ட் இவர்தான். அனுபவம் வாய்ந்த சீனியர் என்பதால் பவனுக்கு பக்கபலமாய் இருப்பார்.
ரெய்டிங் ஏரியாவில் முழுக்க முழுக்க பவனை நம்பியே இருக்கிறது தெலுங்கு டைட்டன்ஸ். கடந்த சீசனில் காயம் காரணமாக கிட்டத்தட்ட தொடர் முழுவதும் பவன் பங்கெடுக்கவே இல்லை. அதன்பின் சர்வதேச போட்டிகளில் எல்லாம் ஆடினார் என்றாலும் ஒருவேளை பி.கே.எல்லில் ஃபார்ம் அவுட்டானால் அவருக்கு உடனிருந்து பாயின்ட்களை சேர்க்க ரஜ்னீஷைத் தவிர வேறு ஆள்களே இல்லை.
டிபென்ஸிலும் பர்வேஸ் மட்டுமே ஸ்டார் பிளேயர். மற்றவர்கள் எல்லாருமே பி.கே.எல்லுக்குப் புதிது. கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல இளம் வீரர்களுள் யாராவது ஒருவர் க்ளிக்காகிவிட்டால் டைட்டன்ஸிற்கு வெற்றிவாய்ப்புகள் அதிகம். இல்லையேல் சிக்கல்தான்.
எட்டாவது சீசனில் அணி தடுமாறிக்கொண்டிருந்தபோது மாற்றுவீரராகத்தான் களமிறங்கினார் ரஜ்னீஷ். ஆனால் களத்தில் அவர் ஆடியது வேறு லெவல் ஆட்டம். 13 போட்டிகளில் 112 புள்ளிகள். அதற்கு இரண்டு சீசன்கள் முன்பிருந்தே டைட்டன்ஸ் முகாமில் இருந்தாலும் ரஜ்னீஷ் வெளிப்பட்டது அந்த சீசனில்தான். கடந்த சீசனில் அவரால் அதிக போட்டிகளில் ஆடமுடியவில்லை. ஆனாலும் அவர் மீது நம்பிக்கைவைத்து தக்க வைத்திருக்கிறது அணி நிர்வாகம். செகண்ட் ரெய்டராய் ரஜ்னீஷ் இந்தமுறை எக்கச்சக்க புள்ளிகள் குவிப்பார் என்பது எதிர்பார்ப்பு.
டிபென்ஸ் ஏரியாவில் ஒன்றிரண்டு மாற்றங்கள் இருக்கலாம். ஆனாலும் இதுதான் டைட்டன்ஸின் பெஸ்ட் ப்ளேயிங் செவன்.
பவன் ஷெராவத் (கேப்டன் - ரெய்டர்), ரஜ்னீஷ் (ரெய்டர்), வினய் ரெது (ரெய்டர்), பர்வேஸ் பெய்ன்ஸ்வால் (லெப்ட் கவர்), மிலாத் ஜப்ரி (ரைட் கவர்), அங்கித் ஜக்லான் (லெப்ட் கார்னர்), சங்கர் கதாய் (ரைட் கார்னர்)
கடந்த மூன்று சீசன்களாக கடைசி இடத்தைப் பட்டா போட்டு வைத்திருக்கிறது தெலுங்கு டைட்டன்ஸ். இந்தமுறை கோப்பையை தொடமுடியாவிட்டாலும் கடைசி இடம் மட்டும் கூடாது என மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ப்ளே ஆப் போகுமா டைட்டன்ஸ்? பவனுக்கே வெளிச்சம்.