ஒரு சீசனில் மிக மோசமாய் ஆடி கடைசி இடம் பிடிப்பார்கள். ஒரு சீசனில் தொடர்ந்து ஏகப்பட்ட மேட்ச்களை ஜெயித்து எதிரணிக்கு கிலி கிளப்புவார்கள். இந்த இரண்டே கிராஃப்தான் புனேரி பல்தான் அணிக்கு. பி.கே.எல்லின் தொடக்கத்திலிருந்து விளையாடி இப்போதுவரை கோப்பை வெல்லாத இரு அணிகள் புனேவும் தெலுங்கு டைட்டன்ஸும். அதுவும் கடந்த முறை அரையிறுதியில் தமிழ் தலைவாஸோடு மோதி த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூரிடம் தோற்றார்கள் பல்தான்ஸ். இந்த முறை விட்டதைப் பிடிக்க வீரியமாக களமிறங்கியிருக்கிறார்கள்.
ஏலத்திற்கும் முன்பும் ஏலத்தின்போதும் காரியத்தில் கண்ணாய் இருந்தது புனே நிர்வாகம். கிட்டத்தட்ட 13 வீரர்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டார்கள். இதன் காரணமாக அவர்களிடம் பணமும் கம்மியாக இருக்க, 'அதெல்லாம் பிரச்னையே இல்ல, எங்களுக்கு தேவை ஒரே ஒரு பிளேயர்தான்' என கங்கணம் கட்டி ஈரானின் முகமதுரேஸா ஷாத்லூவை 2.35 கோடிக்குத் தூக்கினார்கள். இந்த ஏலத்தில் பவனுக்கு அடுத்தபடியாய் அதிக விலை ஷாத்லூவுக்குத்தான். ஆனால் அத்தனையும் வொர்த். பாட்னா கடந்த இரண்டு சீசன்களில் பெற்ற சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகளுக்கு ஷாத்லூவின் டிபென்ஸே முக்கியக் காரணம். மீதி இருக்கும் பணத்தில் வஹீத் ரேஸா என்கிற ஈரானிய டிபென்டரையும் சில பேக்கப்களையும் மட்டுமே வாங்கினார்கள்.
சந்தேகமே இல்லாமல் ஷாத்லூதான். பி.கே.எல்லில் லெப்ட் கார்னர் டிபென்ஸ் ஆடி எதிராளியின் கால்களை இழுத்து காலி செய்வார். ஈரான் தேசிய அணிக்காக லெப்ட் இன் ரைடராக ஆட்டத்தின் முதல் ரெய்டை சில புள்ளிகளோடு தொடங்கிவைப்பார். ஷாத்லூ ஒரு பக்கா ஆல்ரவுண்டர் பேக்கேஜ். துறுதுறுவென திரியும் அவரின் எனர்ஜி களத்தில் சக வீரர்களையும் தொற்றிக்கொள்ளும். இந்தமுறை இவரையே மலை போல நம்பியிருக்கிறது புனேரி பல்தானின் டிபென்ஸ்.
கடந்த சீசனில் ஆடிய மூன்று ரெய்டர்களையும் அப்படியே தக்கவைத்துக்கொண்டது புனே. அஸ்லம் இனம்தார், மோஹித் கோயத், ஆகாஷ் ஷிண்டே மூவரும் முறையே போன சீசனில் 150, 137, 142 புள்ளிகள் எடுத்தார்கள். இத்தனைக்கும் அஸ்லமும் மோஹித்தும் சில போட்டிகள் ஆடவில்லை. ஏசியன் கேம்ஸ் ஆடிய இந்திய அணியிலும் இவர்கள் மூவரும் இருந்தார்கள். இந்தமுறையும் இந்த மூவர் கூட்டணி தலா 150 புள்ளிகள் எடுக்கும்பட்சத்தில் புனே ஸ்கோர்போர்டு எகிறும். பேக்கப்பில் பங்கஜ் மோஹித்தே, ஆதித்ய ஷிண்டே போன்ற ரெய்டர்கள் இருப்பதும் ப்ளஸ்.
டிபென்ஸில் ஷாத்லூவைத் தவிர மற்றவர்கள் ஃபார்மில் இல்லையென்பதுதான் மிகப்பெரிய சிக்கல். புனேவுக்காக தொடர்ந்து கவர் டிபென்டராக ஆடிவரும் அபினேஷ் நடராஜன் கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. மற்றொரு கவர் டிபென்டரான சங்கேத் சாவந்த் அபினேஷை விட மோசமாக ஆடினார் போன சீசனில். இதுபோக ரைட் கார்னரில் ஆடவிருக்கும் கெளரவ் கத்ரியின் ஃபார்மும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முழுக்க முழுக்க ஷாத்லூவை மட்டுமே நம்பியிருப்பதால் எதிரணிகள் இந்த பலவீனத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.
அஸ்லம் இனம்தார். புனே கண்டெடுத்த முத்து. இரண்டு சீசன்களில் 339 புள்ளிகள். முதன்மை ரெய்டராக, நிலைமையைப் பொறுத்து டிபென்டராக மாறி மாறி ஆடக்கூடிய ஆல்ரவுண்டர். இவர் மேல் எக்கச்சக்க நம்பிக்கைவைத்து இவரை கேப்டனாகவும் ப்ரொமோட் செய்திருக்கிறது அணி நிர்வாகம். இவரின் நல்ல ஃபார்ம் தொடரும்பட்சத்தில் அடுத்த தலைமுறை இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்வார்.
ரைட் கார்னரில் ஆடவிருக்கும் கெளரவ் கத்ரியின் இடத்தில் மட்டும் வஹீத் ரேஸா ஆட வாய்ப்பிருக்கிறது. அதுவும் அணியின் போக்கைப் பொறுத்துதான். மற்றபடி இதுதான் ப்ளேயிங் செவனாக இருக்கும்.
அஸ்லம் இனம்தார் (கேப்டன் - ரைடர்), மோஹித் கோயத் (ரைடர்), ஆகாஷ் ஷிண்டே (ரைடர்), சங்கேத் சாவந்த் (லெப்ட் கவர்), அபினேஷ் நடராஜன் (ரைட் கவர்), முகமதுரேஸா ஷாத்லூ (லெப்ட் கார்னர்), கெளரவ் கத்ரி (ரைட் கார்னர்)
ஒருவர் மேல் நாம்கொள்ளும் அதீத நம்பிக்கை சில சமயம் வரம், சில சமயம் வலி. ஷாத்லூ என்கிற ஒற்றையாளை நம்பி களமிறங்குகிறது புனேரி பல்தான். அது வரமா வலியா என்பது போகப் போகத் தெரியும். காத்திருப்போம்.