Gujarat Giants | இந்த முறையாவது கோப்பை வெல்லுமா குஜராத்..?

'நிலாவுல முதல்ல காலை வச்சவரை பத்தித்தான் எல்லாரும் பேசுவாங்க. இரண்டாவதா கால் வச்சவரை பத்தி இல்ல' என ஒரு பன்ச் டயலாக் வருமே. அதுதான் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி.
Rakesh
Rakesh Gujarat Giants
Published on

ஐ.பி.எல்லிலும் பி.கே.எல்லிலும் குஜராத் அணிக்கு ஒரே ஸ்கிரிப்ட் தான். இளம் வீரர்கள் மேல் நம்பிக்கை வைத்து களமிறங்கியது, முதல் இரண்டு சீசன்களில் அதிரடியாய் ப்ளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றது என. ஒரே வித்தியாசம் குஜராத் டைட்டன்ஸ் டைட்டில் அடித்துவிட்டார்கள். குஜராத் ஜெயன்ட்ஸுக்கு அதுமட்டும் பாக்கி. இதுவரை ஆடியிருக்கும் ஆறு சீசன்களில் நான்கு முறை ப்ளே ஆஃப் வந்திருப்பதால் இந்தமுறையும் ப்ளே ஆஃப் போவோமா என்பதெல்லாம் அவர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி இல்லை. கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் அந்த கப் கிடைக்குமா என்பதுதான்.

கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ஃபஸல் அட்ரசலியை முதலில் ரிலீஸ் செய்தார்கள். எதிர்பார்த்ததுதான். அவர் தனியாளாக நன்றாகவே ஆடியிருந்தாலும் அவர் தலைமையிலான டிபென்ஸ் டிபார்ட்மென்ட் ஏதோவொரு வகையில் சொதப்பிக்கொண்டே இருந்தது. இந்த முறை அவரை திரும்ப ஏலத்தில் எடுக்கக்கூட குஜராத் நிர்வாகம் முனையவில்லை. கூடவே ரோஹித் குலியா, நபிபக்ஷ், விகாஷ் ஜக்லான், மோரே, சோம்பீர் என பக்கம் கொள்ளாத கணக்கில் வீரர்களை வெளியேற்றினார்கள். இதில் நபிபக்‌ஷ், சோம்பீர் மட்டும் மீண்டும் ஏலத்தில் தக்கவைக்கப்பட்டனர்.

கடந்த சீசனில் குஜராத் சார்பில் அதிக ரெய்ட் புள்ளிகள் பெற்ற வீரர் பர்தீக் தஹியா. 130 புள்ளிகள். முதன்மை ரெய்டரே இவ்வளவு குறைவான புள்ளிகள் என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும். எனவே இந்தமுறை கண்டிப்பாய் ஒரு நல்ல ரெய்டரை எடுத்தே ஆகவேண்டும் என்கிற தீர்மானத்தோடு வந்தார்கள். குமன் சிங்கை போராடி 1.97கோடிக்கு வாங்கி சாதித்தும்விட்டார்கள். கவர் டிபென்டரான நீரஜ் குமாருக்கு 35 லட்சம் கொடுத்து வரித்துக்கொண்டார்கள். மற்ற வீரர்கள் எல்லாமே அடிப்படை விலையில்தான்.

கடந்த முறை ரெய்டில் படுவீக்காக இருந்த அணி இந்த முறை பயங்கர பலத்தோடு களமிறங்குகிறது. இந்த தலைகீழ் மாற்றம் அவர்களின் பி.கே.எல் பயணத்தையும் தலைகீழாக மாற்றி கோப்பையை கொண்டுவரும் என வாசல்கதவை திறந்துவைத்து காத்திருக்கிறது அணி நிர்வாகம்.

பலம்

குமன் சிங் நான்கு ஆண்டுகளாக பி.கே.எல் ஆடிவந்தாலும் கடந்த சீசன் தான் அவரின் பெர்சனல் பெஸ்ட். 18 போட்டிகளில் 168 புள்ளிகள். 25 வயதுதான் என்பதால் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க ஆட்டத்தில் மெருகேறும் என்பதுதான் ஒட்டுமொத்தமாய் எல்லாருடைய எதிர்பார்ப்பும். அதனால்தான் இவ்வளவு டிமான்ட் அவருக்கு. அடுத்ததாக பர்தீக் தஹியா. நெடுநெடுவென்ற உயரம். கால் போனஸ் கோட்டிலிருந்தால் கை மையக்கோட்டை தொட்டுவிடும். உயரமும் வேகமும் இவரின் ப்ளஸ். அதனால்தான் இரண்டே சீசன்களில் அவரால் 324 புள்ளிகள் சம்பாதிக்க முடிந்திருக்கிறது. மூன்றாவது ரெய்டர் ராகேஷ். பார்ப்பதற்கு, பேசவே கூச்சப்படும் மிடில் பெஞ்ச் பையன் போல இருப்பார். ஆனால் சீசனுக்கு 130 ரெய்ட் பாயின்ட்கள் இவர் பக்கமிருந்து கேரன்டி. இதுபோக, மோனு, தமிழ் தலைவாஸுக்காக பல சீசன்கள் ஆடிய ஹிமான்ஸு சிங், நிதின் என பேக்கப் ஆப்ஷன்களும் எக்கச்சக்கம். இவ்வளவு சாய்ஸ்கள் இருப்பது எந்த அணிக்குமே பெரிய பலம்தான்.


ரெய்டர்கள்தான் அவ்வளவு பேர் என்றால் ஆல்ரவுண்டர்களையும் வகைதொகையில்லாமல் வாங்கி வைத்திருக்கிறார்கள். நபிபக்‌ஷ், ஜிதேந்தர் யாதவ், பாலாஜி, ரோஹன் சிங், ராஜ் சலுங்கே என ஐந்து ஆல்ரவுண்டர்கள். அனேகமாய் இந்த சீசனில் அதிக ஆல்ரவுண்டர்களைக் கொண்ட அணி குஜராத் தான். இதில் நபிபக்‌ஷ் கண்டிப்பாய் நிறைய போட்டிகளில் ஆடுவார். லெப்ட் கவரான பாலாஜி மீதும் அணி நிர்வாகம் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறது. தொடரில் அணியின் போக்கைப் பொறுத்து அவரும் களமிறங்கலாம்.

பலவீனம்

குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் டிபென்ஸ் ரைட் சைடில் இந்தியன் 1 போலவும் லெப்ட் சைடில் இந்தியன் 2 போலவும் இருப்பதுதான் சோகம். ரைட் கார்னர் பொசிஷனில் ஆடப்போகும் சோம்பீர் பி.கே.எல்லில் கரை கண்டவர். குஜராத் என ஒரு அணி உருவாவதற்கு முன்பிருந்தே பி.கே.எல் ஆடிக்கொண்டிருக்கிறார். ரைட் கவரில் ஆடப்போகும் நீரஜும் தன் பங்கிற்கு 80 போட்டிகளில் ஆடி 174 புள்ளிகள் சேர்த்திருக்கிறார். ஆனால் இடது கார்னரில் ஆடப்போகும் ஹர்ஷ் லாட்டிற்கும், இடது கவர் பொசிஷனில் ஆடப்போகும் வஹீத் ரஸேமெய்ருக்கும் மொத்தமாய் சேர்த்தே 17 போட்டிகள்தான் அனுபவம். எதிரணிகளும் இந்த வீக் லிங்க்கை முடிந்தளவிற்கு பயன்படுத்திக்கொள்ள நினைக்கும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்

கிரிக்கெட்டில் இந்த நான்காவது பொசிஷனில் ஆடும் பேட்ஸ்மேன்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து நிதானமாகவோ அதிரடியாகவோ உருமாறி ஆடவேண்டும். அப்படியான பிளேயர் தான் கபடியில் ராகேஷ் சுங்ரோயா. குஜராத் அணியின் மிஸ்டர் டிபென்டபிள். இதுவரை 60 போட்டிகள் குஜராத்திற்காக ஆடியிருப்பவர் மொத்தமாய் 387 பாயின்ட்கள் எடுத்திருக்கிறார். துணை ரெய்டராகவும் தேவைப்பட்டால் முதன்மை ரெய்டராகவும் மாறிமாறி ஆடக்கூடிய திறமைசாலி. இந்த முறை இவர் புள்ளிப்பட்டியலில் குமனையே புள்ளிப்பட்டியலில் ஓவர்டேக் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ப்ளேயிங் செவன்

நபிபக்‌ஷும் சரி, பாலாஜியும் சரி லெப்ட் கவர் பொசிஷனில் களமிறங்கக்கூடியவர்கள்தான். ஆனால் தொடக்க ஆட்டங்களில் வஹீத் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகமெனத் தோன்றுகிறது.

குமன் சிங் (ரெய்டர்), பர்தீக் தஹியா (ரெய்டர்), ராகேஷ் (ரெய்டர்), வஹீத் ரஸேமெய்ர் (லெப்ட் கவர்), நீரஜ் (கேப்டன்), ஹர்ஷ் லாட் (லெப்ட் கார்னர்), சோம்பீர் (ரைட் கார்னர்)

'நிலாவுல முதல்ல காலை வச்சவரை பத்தித்தான் எல்லாரும் பேசுவாங்க. இரண்டாவதா கால் வச்சவரை பத்தி இல்ல' என ஒரு பன்ச் டயலாக் வருமே. அதுதான் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி. கோப்பை வெல்ல தகுதி வாய்ந்த அணியை பல சீசன்களில் கொண்டிருந்தும் நழுவவிட்டு இரண்டாவது இடம்பிடித்ததால் இன்னமும் ரேடாருக்கு கீழேயே பறந்துகொண்டிருக்கிறது. இந்தமுறை மேலே உயர்ந்து நிலவை எட்டிப்பிடிக்கும் என்பது வழக்கமான எதிர்பார்ப்பு. பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com