Jaipur Pink Panthers | அர்ஜுனும் அஜித்தும் ஜெய்ப்பூருக்கு கோப்பை பெற்றுத் தருவார்களா..?

தமிழ்மண்ணில் பிறந்து வளர்ந்த தங்கம் அஜித்குமார் தான். தமிழ் தலைவாஸுக்காக 2019-ல் அவர் களம் கண்டபோது சீனியர் வீரர்கள் எல்லாம் சொதப்பிக்கொண்டிருந்தார்கள்.
 ராகுல் செளத்ரி
ராகுல் செளத்ரிJaipur Pink Panthers
Published on

பி.கே.எல்லின் முதல் சீசன் சாம்பியன். பி.கே.எல்லின் கடைசி சீசனின் சாம்பியனும் கூட. நடுவே சில சீசன்கள் மிக மோசமாய் ஆடி கடந்த சீசனில் இன்டர்வெல்லுக்குபின் வீறுகொண்டெழும் பாலிவுட் ஹீரோ போல வெகுண்டெழுந்து எதிரணியை பந்தாடியது. ஆடிய 22 போட்டிகளில் ஆறில் மட்டுமே தோல்வி. ஸ்கோர் வித்தியாசத்தில் முதலிடத்திலிருந்த ஜெய்ப்பூருக்கும் அடுத்த இடத்திலிருந்த புனேவுக்கும் இடையே 108 புள்ளிகள் வித்தியாசம் என்கிற கணக்கு சொல்லும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை. கோப்பை வென்ற அணியை இஷ்டத்திற்குக் கலைத்துப் போட எப்படி மனம் வரும்? அதனால் கிட்டத்தட்ட அதே அணியோடுதான் களமிறங்குகிறார்கள்.

ஏற்கெனவே செட்டான டீம் என்பதால் ஏலத்திலும் பெரிதாய் ரிஸ்க் எடுத்து யாரையும் வாங்கவில்லை. பேக்கப்பிற்காக சில வீரர்கள். அவர்கள் கவனிக்கும்படி எடுத்த ஒரே வீரர் பி.கே.எல் லெஜெண்ட் ராகுல் செளத்ரி மட்டும்தான். ஒருகாலத்தில் எதிரணிகளை பயமுறுத்திக்கொண்டிருந்த மனிதர் சில சீசன்களாக ஃபார்ம் அவுட்டாகி தவிக்கிறார். ஆனாலும் அவரின் அனுபவம் ஏதேனும் ஒருவகையில் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையில் அவரை தங்களுக்காக தூக்கியிருக்கிறது ஜெய்ப்பூர் நிர்வாகம்.

பலம்

அர்ஜுன் தேஸ்வால் : இந்தியக் கபடியைக் கலக்கிக்கொண்டிருக்கும் இளம்புயல். கடந்த சீசனில் பலரையும் முந்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த சிங்கம். கடந்த இரண்டு சீசன்களாக ஜெய்ப்பூர் அணிக்காக ஆடிய 46 போட்டிகளில் 564 பாயின்ட்கள். சராசரி 12.2. போன சீசனில் மட்டும் 17 'சூப்பர் டென்'கள். இந்த முறையும் இவரின் தோள்களில் ஏறிப் பறக்கக் காத்திருக்கிறது ஜெய்ப்பூர் அணி.

அர்ஜுன் தேஸ்வால்
அர்ஜுன் தேஸ்வால்

முன் சொன்னதுபோல செட்டிலான டிபென்ஸ் ஜெய்ப்பூரின் மற்றுமொரு பலம். கேப்டன் சுனில், அவருக்குத் துணை நிற்கப்போகும் மற்றொரு கவர் டிபென்டர் ரேஸா மிர்பாஹேரி, இரண்டு கார்னர்களிலும் நிற்கப்போகும் அங்குஷ் ரதீயும் ஷாகுலும். இவர்கள் அனைவருமே போன சீசனில் அந்தந்த பொசிஷனில் ஆடி மொத்தமாய் 245 புள்ளிகள் எடுத்து கோப்பை வெல்லக் காரணமானவர்கள். இவர்களைத் தாண்டி கோட்டில் எதிராளிகள் கால் வைப்பது சிரமம்தா

பலவீனம்

ஒரே ஒரு ஏரியாவில் மட்டும் ஜெய்ப்பூர் அணிக்கு சின்ன சிக்கல். முதன்மை ரெய்டராக அர்ஜுன் இருப்பார். அவருக்கு துணை நிற்கப்போவது தமிழ்நாட்டின் அஜித் குமார். ஆனால் இந்த மூன்றாவது ரைடர் எனும் ஏரியாவில் அணிக்கு இருக்கும் ஆப்ஷன்கள் ராகுல் செளத்ரியும் பவானி ராஜ்புத்தும். அவுட்டானவர்களை உள்ளே இழுத்துவரும் மிக முக்கிய பொறுப்பு மூன்றாவது ரைடருக்கு. ஆனால் ராகுல், பவானி இருவருமே ஃபார்மில் இல்லை. எனவே அந்த ஒரு இடம் மட்டும் கொஞ்சம் கவலைக்கிடமாக காட்சியளிக்கிறது.

கவனிக்கப்பட வேண்டிய பிளேயர்

தமிழ்மண்ணில் பிறந்து வளர்ந்த தங்கம் அஜித்குமார் தான். தமிழ் தலைவாஸுக்காக 2019-ல் அவர் களம் கண்டபோது சீனியர் வீரர்கள் எல்லாம் சொதப்பிக்கொண்டிருந்தார்கள். பொறுப்பை உணர்ந்து கிடைத்த கேப்பில் எல்லாம் புள்ளிகளைப் பெற்றுவந்தார். அப்போதே இவர் மேல் மற்ற அணிகளின் கவனம் விழுந்தது. அதற்கடுத்த சீசனில் மும்பைக்காக 20 போட்டிகளில் ஆடி 159 புள்ளிகள். போன சீசனில் முழுமையாக எல்லா ஆட்டங்களிலும் அவரால் பங்கெடுக்க முடியவில்லை. ஆனாலும் துணை ரெய்டராக் தன் வேலையை சரியாகச் செய்தார். இந்த முறை முழுக்க முழுக்க அர்ஜுனுக்கு இவர் மட்டுமேதான் துணை நிற்கவேண்டுமென்பதால் கிடைத்த வெளியை பயன்படுத்தி எக்கச்சக்கமாக ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கலாம்.

ப்ளேயிங் செவன்

மூன்றாவது ரெய்டர் யார் என்பதில்தான் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் தொடக்கத்தில் சில ஆட்டங்கள் அனுபவத்திற்கே முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதன் அடிப்படையில் இந்த ப்ளேயிங் செவன்

அர்ஜுன் தேஸ்வால் (ரைடர்), அஜித் குமார் (ரைடர்), ராகுல் செளத்ரி (ரைடர்), ரேஸா மிர்பாஹேரி (லெப்ட் கவர்), சுனில் (கேப்டன் - ரைட் கவர்), அங்குஷ் (லெப்ட் கார்னர்), சாகுல் (ரைட் கார்னர்)

கடந்த முறை கோப்பை வென்ற அதே டீம். பெரிதாய் குறைகள் இல்லையென்பதால் இந்த முறையும் பி.கே.எல்லை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ள அணிகளுள் ஒன்றாகத் தெரிகிறது ஜெய்ப்பூர். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ஸ்போர்ட்ஸில் சுவாரஸ்யம் ஏது? மசாலாப்படம் படம் போல எதிர்பார்ப்பதுதான் நடக்கப்போகிறதா இல்லை த்ரில்லர் படம்போல ஏதும் ட்விஸ்ட் காத்திருக்கிறதா என்பது இரண்டு மாதங்களில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com