2024 புரோ கபடி லீக் | யு.பி யோதாஸ் அணியின் பிரிவியூ! பலம், பலவீனம் என்ன?
கிரிக்கெட் உலகில் தென்னாப்பிரிக்கா எப்படியோ அப்படி கபடி லீக்கில் யு.பி யோதாஸ் அணி. திறமையான இளம் வீரர்கள், அசாத்திய சீனியர் ஆட்டக்காரர்கள் என அனைத்துஅம்சங்களும் அணியில் இருக்கும். அவர்களும் ஈ.பி.எஸ் முதலமைச்சர் ஆனதைப்போல ஈஸியாக ப்ளே ஆஃப் வரைக்கும் வந்துவிடுவார்கள். ஆனால் அதன்பின் ததிங்கனத்தோம் தான். ஆடிய ஆறு சீசன்களில் ஐந்து முறை தொடர்ந்து ப்ளே ஆஃப் வந்த அணி யு.பி யோதாஸ். டெல்லி, பாட்னா அணிகளும் தொடர்ந்து ஐந்து முறை ப்ளே ஆஃப் வந்திருக்கின்றன என்றாலும் அவர்கள் ஆடியிருப்பது 10 சீசன்கள். எனவே விகித அடிப்படையில் யு.பி அணிதான் முதலிடத்தில் இருக்கிறது.
போன சீசன்தான் யு.பி யோதாஸுக்கு ப்ளே ஆஃப் தவறிப்போன சீசன். அதனாலோ என்னவோ கேப்டன் பர்தீப்புடனான உறவை முறித்துக்கொண்டார்கள். கூடவே விஜய் மாலிக், நிதேஷ், ஹரேந்திர குமார் என எல்லா டிபார்ட்மென்ட்டிலிருந்தும் வீரர்களை வெளியேற்றினார்கள்.
கடந்த மூன்று சீசன்களாக யு.பி அணிக்கு பர்தீப்தான் லீட் ரைடர். அவரை விடுவித்துவிட்டதால் அணிக்கு ரெய்டிங் முகம் ஒன்று தேவைப்பட்டது. பெங்களூருவின் பரத் ஹூடாவை 1.30 கோடி கொடுத்து வாங்கி அந்த இடத்தை நிரப்பினார்கள். கூடவே எதற்கும் இருக்கட்டும் என பவானி ராஜ்புத்தையும் அவரின் அடிப்படை விலையிலிருந்து மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்கினார்கள். டிபென்ஸுக்கு சாகுல், முகமதுரேஸா கபுதரங்கி ஆகியோரையும் எடுத்துக்கொள்ள ஒருமாதிரி திருப்தியான ஷாப்பிங்காக முடிந்தது அந்த ஏலம். அதே திருப்தி அணி நிர்வாகத்திற்கு களத்திலும் கிடைக்குமா?
பலம் :
ஒண்ணேகால் கோடி கொடுத்த எடுக்கப்பட்ட பரத்தின் பெரிய ப்ளஸ் அவரின் உயரம். அவராக போனஸ் கோட்டைத் தாண்டி இறங்கினால் மட்டுமே எதிரணி டிபென்டர்களுக்கு வாய்ப்பு. கொஞ்சம் பேராசைப்பட்டு அவரை பிடிக்க முயன்றால் அப்படியே கோயிலில் விழுவதுபோல நெடுசாண்கிடையாக விழுந்தே மையக்கோட்டை எட்டிவிடுவார்.
யு.பியின் மற்றொரு அஸ்திரம் சுரேந்தர் கில். ஆர்ப்பாட்டமே இல்லாத வீரர். அவர் கோட்டைத் தாண்டிவருவது மட்டும்தான் தெரியும். யாரைத் தொட்டார், எப்படி பாயின்ட் எடுத்தார் என யோசிப்பதற்குள் அம்பயர் சூப்பர் ரெய்ட் என கைதூக்கிவிடுவார். இந்த இருவருக்குத் துணையாக பவானி ராஜ்புத், கடந்த சீசனின் சென்சேஷன் ககன் கெளடா, ஹைதரலி எக்ராமி, ஷிவம் செளத்ரி என ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருப்பதால் ஒரு நல்ல ரெய்டிங் படையோடுதான் களமிறங்குகிறது யு.பி யோதாஸ் அணி.
பலவீனம் :
பிரதான வீரர்களின் ஃபார்ம் அவுட் இந்தமுறை யு.பி அணி நிர்வாகத்தின் தூக்கத்தை கெடுக்கப்போகிறது. பரத்தின் மோசமான பி.கே.எல் சீசன் கடந்த சீசன் தான். கவர் டிபென்டரான மஹிந்தர் சிங் கடந்த சீசனில் யூ-மும்பாவிற்காக எவ்வளவோ முயன்றும் பாயின்ட்களை தேற்ற முடியவில்லை. மற்றொரு கவர் டிபென்டரனா அஷு சிங் நான்கு சீசன்களாக யு.பி. அணியில்தான் இருக்கிறார். அவருக்கும் போன சீசன் தான் இருப்பதிலேயே மோசமான சீசன். கார்னர் டிபென்டரான சாகுல் குமாரின் கதையும் அச்சுபிசகாமல் இதேதான். அணி நிர்வாகம் இப்படி ஒருசேர போன சீசனின் ஃபார்ம் அவுட் பிளேயர்களை எடுத்திருப்பது அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா இல்லை மோசமான திட்டமிடலா என்பது போகப் போக தெரிந்துவிடும்.
சுரேந்தர் கில் சூப்பரான பிளேயர்தான். ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக காயம் அவரை கன்னாபின்னாவென படுத்தியெடுக்கிறது. இரண்டு சீசன்களில் மொத்தம் 44 போட்டிகளில் 24 போட்டிகளில்தான் ஆடியிருக்கிறார். இந்தமுறை கேப்டன் பொறுப்பையும் கூடுதலாக சுமப்பதால் அவரின் உடல்நிலையில்தான் இருக்கிறது யு.பி யோதாஸ் அணியின் அச்சாரம்.
கவனிக்கப்படவேண்டிய வீரர் :
கர்நாடக கபடியின் நம்பிக்கை நட்சத்திரம் ககன் கெளடா. வாலிபால் பிளேயராக வளர்ந்து ஒருகட்டத்தில் கபடி பக்கம் கவனத்தைத் திருப்பியவர். கபடி சூப்பர்ஸ்டார் அஜய் தாக்கூர்தான் ககனின் ஆஸ்தான குரு. யுவா கபடித் தொடரில் கலக்கியவர் அதன்மூலம் பி.கே.எல்லில் என்ட்ரியானார். நுழைந்த முதல் சீசனிலேயே 92 புள்ளிகள். சீனியர் சுரேந்தர் கில் காயம் காரணமாக விலகியபின் எஞ்சிய ஆட்டங்களில் அவர் இடத்திலிருந்து பொறுப்பாய் ஆடியது ககன் தான். இந்த முறை இவருக்கு இன்னும் கொஞ்சம் வெளி கிடைக்கும்பட்சத்தில் பாயின்ட்களைக் குவிப்பார்.
ப்ளேயிங் செவன் :
ரைட் கார்னருக்கு சாகுல், ஹிதேஷ் என இரு நல்ல ஆப்ஷன்கள் யோதாஸ் அணிக்கு. சாகுல் சீனியர். ஹிதேஷ் கடந்த சீசனில் யோதாஸ் அணியின் ரைட் கார்னர் டிபென்டர். முதல் சில ஆட்டங்களில் அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சாகுலை களமிறக்கவே வாய்ப்புகள் அதிகம்.
சுரேந்தர் கில் (கேப்டன் - ரைடர்), பரத் ஹூடா (ரைடர்), ககன் கெளடா (ரைடர்), மஹிந்தர் சிங் (லெப்ட் கவர்), அஷு சிங் (ரைட் கவர்), சுமித் (லெப்ட் கார்னர்), சாகுல் (ரைட் கார்னர்).
'துண்டு ஒருமுறைதான் தவறும்' என கெத்தாக என்ட்ரி கொடுக்கிறது யோதாஸ் அணி. அந்த கெத்தை ஓரளவிற்கு மேட்ச் செய்யும் வீரர்கள் அணியில் இருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். இந்தமுறை ப்ளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றால் கோப்பையை அவ்வள்வு எளிதாக விட்டுத்தரமாட்டார்கள்.