ஸ்போர்ட்ஸ் லீக் போட்டிகளுக்கும் தமிழ்நாட்டிற்குமான உறவு தி.மு.க காங்கிரஸ் கூட்டணி போல. கொஞ்சம் முன்னேப்பின்னே இருந்தாலும் வெற்றி வசப்பட்டுவிடும். கிரிக்கெட், கால்பந்து, பேட்மிண்டன், ஏன் இரண்டு ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட கோ-கோ லீக்கில்கூட தமிழ்நாட்டு அணிகளின் ராசி இது. அது என்னவோ கபடி லீக்கிற்கும் தமிழ் தலைவாஸ் அணிக்குமான உறவு மட்டும் அ.தி.மு.க - அ.ம.மு.க போல. அறவே ஆகமாட்டேன் என்கிறது. இத்தனைக்கும் சி.எஸ்.கே போலவே மஞ்சள் சொக்கா, சீனியர் வீரர்களை மட்டுமே வைத்து டீமை நடத்துவது என ஏகப்பட்ட ஐடியாக்கள் பின்பற்றி சூடுபட்டாயிற்று.
பி.கே.எல்லின் ஐந்தாவது சீசனில் அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணியின் அதிகபட்ச சாதனை ஒன்பதாவது சீசனில் அரையிறுதி வரை சென்றதுதான். அணி ப்ளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றதும் அந்த ஒருமுறைதான். அதற்கு முந்தைய சீசன்கள் எல்லாம் கடைசி இடத்தில் பெர்த் புக் செய்து படுத்துக்கொண்டுதான் பயணிப்பார்கள். இந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் அந்த விதியை உடைத்தெறிந்துவிட்டு அடித்து ஆடுகிறார்கள்.
இத்தனைக்கும் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணியில் இருந்த வீரர்கள் எல்லாருமே சூப்பர்ஸ்டார்கள். அஜய் தாக்கூர், ராகுள் செளத்ரி, மஞ்சித் சில்லர், அமித் ஹூடா என அவெஞ்சர்ஸ் அணி இது. ஆனால் இவர்களுக்கிடையிலான ஈகோ மோதல் அணியின் வெற்றியை பாதித்தது. பி.கே.எல்லில் அதிக போட்டிகளை டிரா செய்திருக்கும் அணி தமிழ் தலைவாஸ்தான். இறுதிக்கட்டத்தில் டிரா ஆனாலே போதும் என சீனியர்கள் படை சரண்டரானது.
ஒன்பதாவது சீசனில்தான் வாழ்வோ தாழ்வோ இனி இளம் வீரர்களை வைத்தே பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தது அணி நிர்வாகம். உடனடியாக கிடைத்தது ரிசல்ட். நரேந்தர், சாஹர், சாகுல் குலியா என ஏகப்பட்ட வீரர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள். தமிழ் தலைவாஸை லேசாக எடைபோட்டுக்கொண்டிருந்த அணிகளும் எச்சரிக்கையோடு ஆடத்தொடங்கின. 5,6,7,8 சீசன்களில் 88 போட்டிகளில் ஆடி 20-ல் வெற்றி. 9,10 சீசன்களில் 46 போட்டிகளில் ஆடி 20-ல் வெற்றி. இப்போது புரிந்திருக்குமே இந்த தலைகீழ் மாற்றம்.
ஏலத்திற்கு முன்னதாய் கோர் டீமை அப்படியே தக்கவைத்துக்கொண்டார்கள். மிஸ்ஸான ஒரே ஆள் அஜிங்க்யா பவார். அவருக்கு பதில் ஒரு லீட் ரெய்டரை எடுப்பார்கள் என எதிர்பார்த்ததுதான். ஆனால் இந்த ஏலத்தின் அதிகபட்ச விலைக்கு வாங்குவார்கள் என்பதுதான் யாரும் எதிர்பார்த்திடாத ட்விஸ்ட். பாட்னா பைரேட்ஸின் ஆஸ்தான ரைடரான சச்சின் தன்வரை 2.15 கோடிக்கு எடுத்தார்கள். பஸ்தமியை ரீட்டெயின் செய்தார்கள். அவ்வளவுதான். வாங்கப்பட்ட மீதி அனைவருமே இளம் வீரர்கள். சமீபத்தில்தான் சீனியரான சந்திரன் ரஞ்சித்தையும் போன சீசனில் அறிமுகமான மாசானமுத்து லஷ்மணனையும் எஞ்சிய இடங்களுக்கு அணியில் தேர்ந்தெடுத்தார்கள்.
புது கேம்பிளான், புது கோச்கள், பாயக் காத்திருக்கும் இளம் ரத்தங்கள் என இதுவரை இல்லாத எனர்ஜியோடும் முனைப்போடும் களமிறங்குகிறது தமிழ்தலைவாஸ் அணி. கபடியிலும் கோப்பை வென்று தமிழ்நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்தைக் கட்டிக்காக்குமா?
ரைட், லெப்ட் கார்னர்களுக்கு சாஹர், சாஹில், கவர் பொசிஷன்களுக்கு மோஹித், அபிஷேக், ஆல்ரவுண்டராக ஹிமான்ஸு, பிரதான ரைடராக நரேந்தர் என ஆறு இடங்களுக்கு ஆல்ரெடி செட்டான பிளேயர்கள் ரெடி. பேக்கப் ஆப்ஷன்களான மாசானமுத்து, பஸ்தமி, ரோனக், ஆஷிஷ், விஷால் சாஹல் ஆகியோரும் முடிந்தளவிற்கு அணிக்காக கடந்த சீசன்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்கள்தான். சச்சின் ஒருவர் மட்டும்தான் ஆடப்போகும் வீரர்களில் புதுமுகம். அவரும் எளிதில் இவர்களோடு கலந்துவிடுவார். இப்படி பக்காவாக செட்டான அணியோடு வருவது அணிக்கு பெரிய பலம்.
நரேந்தர் சீசனுக்கு 200 புள்ளிகளுக்குக் குறையாமல் எடுக்கிறார். சச்சின் ஆயிரம் ரெய்ட் பாயின்ட்கள் என்கிற மைல்கல்லை இந்த சீசனில் தாண்டிவிடுவார். கேப்டன் சாகர் இந்தத் தலைமுறையின் தி பெஸ்ட் ரைட் கார்னர் டிபென்டர். மூன்றே சீசன்களில் 223 டேக்கிள் பாயின்ட்கள். அவருக்கு சரியான இணை லெப்ட் டிபென்டரான சாஹில். ரெய்டில் இரண்டு, டிபென்ஸில் இரண்டு என இப்படியான நால்வர் கூட்டணி அனேகம் அணிகளில் இல்லவே இல்லை.
குழுவாய் டேக்கிள் செய்வதில் தமிழ் தலைவாஸ்ஸை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. ஆனால் இக்கட்டான நேரத்தில் தனித்தனியாக டேக்கிள் செய்ய நேரும்போதும் ஏகத்திற்கும் சொதப்புவார்கள். முக்கியமாய் கவர் டிபென்டர்களான அபிஷேக்கும் மோஹித்தும் அநியாயத்திற்கு அவசரப்படுவார்கள். இந்தமுறை அந்த தவறை அவர்கள் திருத்துக்கொள்ளாவிட்டால் சிக்கல்தான்.
சாஹர் களத்தில் இருக்கும்வரை அணி, 'தொட்டுப்பாரு, தொட்டுப்புட்டா தாறுமாறு' ரகம்தான். ஆனால் அவர் காயம் காரணமாக களத்திலிருந்து வெளியேறிவிட்டால், 'எல்லாமே பில்டப்புப்பா' என மொத்தமாய் சரண்டராகிவிடுகிறது அணி. கடந்த இரண்டு சீசன்களாக காயத்தால் அவதிப்பட்ட சாஹர் இந்தமுறை முழு சீசனும் ஆடவேண்டியது அணியின் வெற்றிக்கு மிக அவசியம்.
ஒன்பதாவது சீசனின் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் கோச்சாக இருந்தவர் உதயகுமார். அணி முதல் ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெல்ல, சீசன் நடுவிலேயே ராஜினாமா செய்துவிட்டு விலகினார் உதயகுமார். பின் வந்தவர் தான் அஷன்குமார். அவர் தலைமையில் அணி கண்டது புது எழுச்சி. வரிசையாய் போட்டிகளை வென்று அரையிறுதிவரை போனது. சட்டென அஷன் தொட்டதும் தலைவாஸ் தங்கங்களாய் மின்னியது எப்படி என எல்லாருமே ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். பத்தாவது சீசனிலும் அஷன் தான் கோச். ஆனால் அதன்பின் சில காரணங்களால் அஷனும் விலகிக்கொள்ள, இந்தமுறை மீண்டும் உதயகுமாரே கோச்சாக அழைத்துவரப்பட்டிருக்கிறார். இது அணியில் நேர்மறை தாக்கத்தை உண்டுபண்ணுமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதுவரை இல்லாத புதுமையாய் இரண்டு கோச்களோடு களமிறங்குகிறது அணி. மற்றொருவர், கபடி வட்டாரத்தில் எல்லாராலும் 'அண்ணா' என பாசமாய் அழைக்கப்படும் தர்மராஜ் சேரலாதன். இருவருமே வெயிட்டான பயிற்சியாளர்கள்தான் என்றாலும் இந்த பரிசோதனை முயற்சியின் பலன் போகப்போகத்தான் தெரியும்.
விஷால் சாஹல் - ஹரியானாவிலிருந்து புயலாய் புறப்பட்டிருக்கும் இளம் நட்சத்திரம். யுவா கபடி சீரிஸில் 500 ரெய்ட் புள்ளிகளை எடுத்த இரண்டாவது வீரர். அதனாலேயே தமிழ் தலைவாஸ் நிர்வாகத்தின் கண்ணில்பட, கடந்த சீசனில் பி.கே.எல்லிற்குள் என்ட்ரி. அதிக கேம்டைம் ,கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். சீசனின் கடைசி லீக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியோடு மோதிய தமிழ் தலைவாஸ் 74 - 37 என்கிற ஸ்கோர் கணக்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. பி.கே.எல்லில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் இந்த பத்தியின் நாயகன் விஷால் சாஹல்தான். ரெய்ட், டேக்கிள் என மொத்தமாய் அந்தப் போட்டியில் மட்டும் 19 புள்ளிகள். இந்தமுறை சச்சின், நரேந்தருக்கு அடுத்தபடியாய் இவருகே வாய்ப்புகள் நிறைய கிடைக்கும்.
கவர் பொசிஷன்களுக்கு ரோனக், ஆஷிஷ் என இரு ஆப்ஷன்கள் இருந்தாலும் தொடக்க ஆட்டங்களில் அபிஷேக், மோஹித் களம் காணவே வாய்ப்புகள் அதிகம்.
சச்சின் தன்வர் (ரைடர்), நரேந்தர் (ரைடர்), விஷால் சாஹல் (ரைடர்), மோஹித் (லெப்ட் கவர்), அபிஷேக் (ரைட் கவர்), சாஹில் குலியா (லெப்ட் கார்னர்), சாஹர் (கேப்டன் - ரைட் கார்னர்).
முதல் சீசனிலிருந்து ஆடிய தமிழ் தலைவாஸ் அணிகளை எல்லாம் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த முறை அமைந்திருக்கும் அணிதான் பெஸ்ட். அந்தவகையில் அணி நிர்வாகம் தன் கடமையை கரெக்ட்டாக செய்து முடித்துவிட்டது. இனி எல்லாம் கோச், வீரர்களில் கையில்தான். கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் கோப்பையை அணி வெல்லவேண்டும், அதைப் பார்த்து தொண்டை வறள விசில் போடவேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆசை. விசிலடிக்கத் தயாராய் இருங்கள். இன்னும் கொஞ்ச காலம்தான்.