பி.கே.எல்லின் முதல் சீசனில் மங்களகரமாய் கோப்பையை வென்று பயணத்தைத் தொடங்கிய ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி அதற்கடுத்த ஏழு சீசன்களில் எவ்வளவோ முயன்றும் கோப்பை வைத்திருக்கும் டேபிள் பக்கம்கூட போகமுடியவில்லை. கிட்டத்தட்ட ஐ.பி.எல்லின் ராஜஸ்தான் ராயல்ஸ் கதைதான். அதுநாள் வரை கேப்டனாக இருந்த தீபக் ஹூடாவை தயவுதாட்சண்யமே பார்க்காமல் தூக்கியடித்துவிட்டு கவர் டிபென்டர் சுனிலை கேப்டனாக்கியது நிர்வாகம். அவர் வழியே அணிக்கு வந்தது மறுவாழ்வு. ஒன்பதாவது சீசனில் மீண்டும் சாம்பியன். போன சீசனிலும் ப்ளே ஆஃப் வரைக்கும் அணியை வழிநடத்தி அழைத்துப்போனார். ஆனால் மீண்டும் என்ன நினைத்தார்களோ அவருக்கும் டாட்டா காட்டிவிட்டு இந்தமுறை புது கேப்டனோடு களமிறங்குகிறார்கள்.
மோசமாய் பெர்ஃபார்ம் செய்த அணியிலிருந்து வீரர்களை வெளியேற்றுவது இயல்பு. ஆனால் 22 போட்டிகளில் 16 வெற்றிபெற்று பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற அணியிலிருந்தும் வீரர்களை கூண்டோடு அனுப்பலாம் என இந்த ஏலத்திற்கு முன்னதாய் தெரிந்துகொண்டார்கள் ரசிகர்கள். அஜித், சாகுல், பவானி ராஜ்புத், ஆஷிஷ் என ஜெய்ப்பூர் நிர்வாகம் விடைகொடுத்தனுப்பிய லிஸ்ட் மிகவும் பெரிது.
சுனிலின் இடத்தை நிரப்ப மற்றொரு சீனியரான சுர்ஜித் சிங்கை 60 லட்சம் கொடுத்து எடுத்தார்கள். இரண்டாவது, மூன்றாவது ரெய்டர்களாக விகாஷ் கண்டோலா, ஶ்ரீகாந்த் ஜாதவ் அணிக்குள் வந்தார்கள். வெளியே போன லக்கி சர்மா மீண்டும் அடிப்படை விலைக்கே கிடைக்க அவரையும் அள்ளிப்போட்டுக்கொண்டார்கள். மீதி அனைவரும் சம்பிரதாய ஷாப்பிங்கில் சிக்கியவர்கள்தான். பிங்க் பேந்தர்ஸின் ஏலம் முடிவுக்கு வந்தது.
ஏலத்திற்கு முன்பாக அதிரடியாய், ஏல டேபிளில் மேய்யழகன் அரவிந்தசாமி போல சாந்தமாய் பிங்க் பேந்தர்ஸ் போட்டிருக்கும் இந்த ஸ்ட்ராடிஜி வேலைக்காகுமா
மின்னல் வீரன் அர்ஜுன் தேஸ்வால். ஆள் மொத்தமாய் ஆடியிருப்பதோ நான்கே சீசன்கள். அதில் மூன்று ஜெய்ப்பூர் அணிக்காக. அதற்குள் ஆயிரம் புள்ளிகளை நெருங்கிவிட்டார். 69 போட்டிகளில் 842 புள்ளிகள். சராசரி 12.02 இந்தமுறையும் குறைந்தது 250 புள்ளிகளாவது எடுப்பார் என எதிர்பார்க்கலாம். இவருக்கு பக்கபலமாய் நிற்கப்போவது விகாஷ் கண்டோலாவும், ஶ்ரீகாந்த் ஜாதவ்வும். இருவரும் பி.கே.எல்லில் முறையே 822, 717 புள்ளிகள் எடுத்திருக்கிறார்கள். இந்த மூவர் குழுதான் எதிரணியை கலங்கடிக்கப் போகிறது.
ரெய்டிங்கில் மட்டுமல்ல, டிபென்ஸிலும் ஒரு மூவரணி மிரட்டக் காத்திருக்கிறது. பி.கே.எல்லில் அதிக டிபென்ஸ் புள்ளிகள் எடுத்தவர்கள் பட்டியலில் இருக்கும் சுர்ஜித், இரானிய காளை ரேஸா மிர்பாகேரி, கார்னரில் கால் வைத்தாலே தூக்கி விசிறியடிக்கும் அங்குஷ். ரேஸாவும் அங்குஷும் பிங்க் பேந்தர்ஸுக்காக பலகாலமாக ஆடிவருகிறார்கள். சுர்ஜித்திற்கு இது ஒன்பதாவது சீஸன். ஏழாவது அணி. எக்கச்சக்க அனுபவம். இந்த முதிர்ச்சி அவர்களுக்குக் கைகொடுக்கலாம்.
சுனில் தலைமையில் இந்த அணி ஆடிய 47 போட்டிகளில் 33-ல் வெற்றி, நான்கில் டிரா. வெற்றி சதவீதம் கிட்டதட்ட 75. அப்பேர்ப்பட்ட கேப்டன் இல்லாமல் களமிறங்குகிறது பிங்க் பேந்தர்ஸ். அர்ஜுனுக்கு அனுபவமில்லாமல் இல்லை. சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்காக இதே சீனியர்களோடு இணைந்து ஆடியிருக்கிறார். ஆனால் கேப்டன் என்கிற கூடுதல் அழுத்தம் அவரை பாதிக்கிறதா இல்லையா எனத் தெரிந்துகொள்ள குறைந்தது 5 போட்டிகளாவது ஆகும்.
விகாஷ் கண்டோலா, ஶ்ரீகாந்த் ஜாதவ், நீரஜ் நர்வால், லக்கி சர்மா.. இவர்கள் அனைவரும் சொல்லிவைத்தது போல கடந்த சீசனில் ஃபார்ம் அவுட். இந்த நால்வரில் மூன்று பேர் எப்படியும் ப்ளேயிங் செவனில் ஆடுவார்கள் எனும்பட்சத்தில் தங்கள் முழுத்திறனை வெளிக்கொணரவேண்டியது அவசியம். இல்லையென்றால் ஒண்டியாய் சந்திரமுகி பங்களாவுக்கு வெள்ளையடிக்கும் கோவாலு நிலைதான் அர்ஜுன் தேஸ்வாலுக்கு.
லெப்ட் கார்னர் டிபென்டரான அங்குஷ். இரண்டு சீசன்களாகத்தான் பி.கே.எல் ஆடுகிறார். ஆனால் அதற்குள் 159 டேக்கிள் பாயின்ட்கள். கடந்த ஆண்டு நடந்த ஜுனியர் கபடி உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடி கோப்பை வென்ற துறுதுறு திறமைசாலி. இந்த சீசனிலும் அதே ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.
அர்ஜுன் தேஸ்வால் (கேப்டன் - ரைடர்), விகாஷ் கண்டோலா (ரைடர்), ஶ்ரீகாந்த் ஜாதவ் (ரைடர்), ரேஸா மிர்பாகேரி (லெப்ட் கவர்), சுர்ஜித் (ரைட் கவர்), அங்குஷ் (லெப்ட் கார்னர்), லக்கி சர்மா (ரைட் கார்னர்).
நிறைய விமர்சனங்களுக்கு மத்தியில்தான் அணியை மாற்றியமைத்திருக்கிறார்கள் நிர்வாகத்தினர். இதில் சறுக்கினால் வீரர்களைத் தாண்டி அணி ஓனர் அபிஷேக் பச்சன் தொடங்கி கோச் சஞ்சீவ் பலியான் வரை ஏலத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் பதில் சொல்லியாக வேண்டும். அந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தன் எனர்ஜியை அணி வீரர்களுக்கு மடைமாற்றிவிட்டு வலம்வந்துகொண்டிருக்கிறார் அபிஷேக் பச்சன். பதிலுக்கு அணி அவருக்கு பரிசளிக்கப்போவது சிரிப்பா சோகமா என எட்டு வாரங்களில் தெரிந்துவிடும்.