பி.கே.எல்லின் சைலன்ட் கில்லர்ஸ் ஹரியானா ஸ்டீலர்ஸ். இந்த லீக்கில் தங்களின் ஆதர்ஷ அணிகளை வெறித்தனமாக சப்போர்ட் செய்பவர்களுக்குக் கூட இரண்டாவது பேவரைட் அணியாக ஹரியானா இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஸ்டார் பிளேயர்கள் என யாரும் அணியில் இருந்ததில்லை. (கடந்த காலத்தில் ஸ்டீலர்ஸ் அணியின் முகமாக இருந்த விகாஷ் கண்டோலாவுமே இந்த அணி நிர்வாகத்தால் பட்டை தீட்டப்பட்டவர்தான்). ஆனாலும் எப்படியாவது முட்டிமோதி ப்ளே ஆஃப்பிற்குள் நுழைந்துவிடுவார்கள். ஆறு சீசன்களில் மூன்று முறை ப்ளே ஆஃப். அதிலும் கடந்த முறை பைனல் வரை. இரண்டு சீசன்களில் ப்ளே ஆஃப் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ். விட்டதைப் பிடிக்க இந்த முறை விடாக்கண்டனாய் களமிறங்குகிறார்கள்.
அந்த முனைப்பு ஏலத்திலேயே தெரிந்தது. பிரபஞ்சன், சந்திரன் ரஞ்சித், மோனு, சித்தார்த் தேசாய் என எல்லா ரெய்டர்களையும் ஏலத்திற்கு முன்பாய் ரிலீஸ் செய்தவர்கள் இரானிய சூப்பர்ஸ்டார் ஷாத்லூவை குறிவைத்து விரட்டினார்கள். ஒருகட்டத்தில் இவர்களின் தீர்மானம் புரிந்து மற்ற அணிகள் விலகிக்கொள்ள, 2.07 கோடிக்கு ஷாத்லூவை இழுத்துக்கொண்டார்கள். இவர்களின் புண்ணியத்தில் பி.கே.எல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டுவீரர் என்கிற சாதனையை படைத்தார் ஷாத்லூ.
ஒருபாதி பட்ஜெட்டை ஒரே வீரருக்கு செலவழித்துவிட்டதால் எஞ்சிய காசுக்கு சிக்கியவர்களை மட்டுமே எடுத்துவர முடிந்தது அவர்களால். இப்படி ஷாத்லூ ஷியானேவை மையமாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த அணி கோப்பையை வெல்லுமா?
இந்த சீசனில் பலம் வாய்ந்த டிபென்ஸ் டிபார்ட்மென்ட்டைக் கொண்ட அணி ஹரியானாதான். லெப்ட் கவரில் ஆடும் ஜெய்தீப் தஹியா இந்தத் தலைமுறை இந்திய கவர் டிபென்டர்களில் தி பெஸ்ட். 66 போட்டிகளில் 188 டேக்கிள் பாயின்ட்கள்.
கடந்த முறை ஹரியானா இறுதிப்போட்டி வரை செல்ல முக்கியக் காரணம் அணியின் ரைட் கார்னர் டிபென்டரான ராகுல் சேத்பால். 23 போட்டிகளில் 76 டேக்கிள் பாயின்ட்கள். லெப்ட் கார்னருக்குத்தான் இப்போது இருக்கிறாரே ஷாத்லூ ஷியானே. கடந்த சீசனில் 24 போட்டிகளில் 99 டேக்கிள் பாயின்ட்கள். பி.கே.எல் வரலாற்றில் இரண்டாவது பெஸ்ட் ஸ்கோர் இது. எடப்பாடி - ஓ.பி.எஸ் இணைவது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கஷ்டம் இந்த மூவரையும் தாண்டி எதிரணி ரெய்டர்கள் போனஸ் கோட்டைத் தொடுவது.
கடந்த சீசனிலாவது பிரபஞ்சன், சந்திரன் ரஞ்சித் என சீனியர் வீரர்கள் இருந்தார்கள். இந்தமுறை ரெய்டிங் டிபார்ட்மென்ட்டில் ஒரு சீசனுக்கும் மேல் ஆடிய அனுபவமே ஒரே ஒரு வீரருக்குத்தான் இருக்கிறது. வினய். அவருக்கு பேக்கப்பாக இருக்கும் ஷிவம் பதாரேவும் விஷால் டேட்டும் கடந்த சீசன் மட்டுமே ஆடியிருக்கிறார்கள். எஞ்சிய ரெய்டர்களுக்கு அந்த அனுபவமும் இல்லை. ஒருவேளை வினய் ஃபார்ம் அவுட்டானால் மொத்தமாகவே படுத்துவிடும் இந்த ரெய்டிங் யூனிட்.
மோஹித்தான் கடந்த சீசன்வரை அணியின் ஆஸ்தான ரைட் கவர். கடந்த முறை ஜெய்தீப்போடு கேப்டன்சி பொறுப்பையும் பகிர்ந்துகொண்டார். ஆனால் சமீபத்தில் அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்க, அவரை விடுவித்துவிட்டது அணி நிர்வாகம். அவருக்குப் பதிலாய் ரைட் கவரில் ஆட அனுபவம் வாய்ந்த வீரரே இல்லை. எனவே ரைட் கவர் ஹரியானா கோட்டையில் விழுந்த ஓட்டைதான்.
ஷிவம் பதாரே - இருபதே வயதான மகாராஷ்டிரா வீரர். ஸ்டேட் சாம்பியன்ஷிப், ஜுனியர் நேஷனல், கேலோ இந்தியா யூத் கேம்ஸ் என களம்கண்ட தொடர்களில் எல்லாம் கலக்கியவர். கடந்த சீசனில்தான் பி.கே.எல்லில் அறிமுகமானார். ஆனால் பயமறியாத இந்த இளங்கன்று, துணை ரெய்டராக போன சீசனில் எடுத்த ரெய்டிங் புள்ளிகள் மட்டும் 120. இந்தமுறை வினயைத் தவிர சீனியர் வீரர்களும் யாருமில்லாததால் அவருக்கான பெரிய வெளி உருவாகியிருக்கிறது. நன்றாக பயன்படுத்திக்கொள்வார் என்றே எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
மோஹித் இடத்தில் ஆட சில வீரர்கள் இருந்தாலும் கடந்த சீசனில் பாட்னா பைரேட்ஸ் அணியில் ஆடிய அனுபவம் கொண்ட சஞ்சய்யே முதல் சில போட்டிகளில் ரைட் கவர் பொசிஷனில் இறங்குவார்.
வினய் (ரெய்டர்), ஷிவம் பதாரே (ரெய்டர்), விஷாய் டேட் (ரெய்டர்), ஜெய்தீப் தஹியா (கேப்டன் - லெப்ட் கவர்), சஞ்சய் (ரைட் கவர்), ஷாத்லூ ஷியானே (லெப்ட் கார்னர்), ராகுல் சேத்பால் (ரைட் கார்னர்).
ஒருபக்கம் பலம் வாய்ந்த டிபென்ஸ், இன்னொருபக்கம் அனுபவக்குறைவுள்ள ரெய்டிங், கிட்டத்தட்ட சீஸாவைப் போலவே ஒரு சமநிலையற்ற அணியோடு களமிறங்குகிறது ஹரியானா ஸ்டீலர்ஸ்.
தொடர் நடக்க நடக்கத்தான் இவர்கள் நிஜமாகவே நெஞ்சுரம் கொண்ட ஸ்டீலர்ஸா இல்லை பேலன்ஸ் இல்லாத சீஸாவா எனத் தெரியும்.