2019ஆம் ஆண்டிற்கான கபடி உலகக் கோப்பை வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பஞ்சாப்பில் நடைபெற உள்ளது.
2019ஆம் ஆண்டிற்கான கபடி உலகக் கோப்பை பஞ்சாப்பில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தேதியை பஞ்சாப் மாநில விளையாட்டு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி இந்த உலகக் கோப்பை தொடர் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் கபடி உலகக் கோப்பை போட்டிகள் சீக்கிய மத குரு குருநானக் தேவ்க்கு அர்பணிக்கப்படும் என்று பஞ்சாப் மாநில விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா உள்ளிட்ட அணிகள் இடம்பெற உள்ளன. எனினும் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்னும் மத்திய அரசிடமிருந்து என்.ஓ.சி சான்றிதழை பெறவில்லை என்று பஞ்சாப் விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கபடி உலகக் கோப்பை போட்டியில் ஈரான் அணியை தோற்கடித்து இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அதேபோல இதற்கு முன்பு 2004, 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கபடி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.