கைகொடுக்குமா கே.எல்.ராகுலின் மேஜிக் ? ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் ?

கைகொடுக்குமா கே.எல்.ராகுலின் மேஜிக் ? ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் ?
கைகொடுக்குமா கே.எல்.ராகுலின் மேஜிக் ? ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் ?
Published on

இதுவரை 12 ஐபிஎல் தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆகியவை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளன. இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணிகள் எதுவென்றால் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளாகும். ஆகையால், இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், பட்டத்தை வெல்லும் முனைப்பில் இந்த மூன்று அணிகளுமே இருக்கின்றன.

இதில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்க்கு இம்முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஆடம் கில்கிறிஸ்ட், குமார சங்கக்காரா ஆகியோர் அணியிலிருந்தும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைக்கவில்லை. 2008 ஐபிஎல் தொடரில் அரையிறுதி வரை அந்த அணி முன்னேறியது. பின்பு 2014 இல் ரன்னர் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதுதான் ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிகபட்ச சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேலும் கடைசி 5 ஐபிஎல் தொடர்களில் ஒரு முறை கூட அந்த அணியால் "பிளே ஆஃப்" சுற்றுக்கு கூட தகுதிப் பெறவில்லை என்பதுதான் கவலை தரும் விஷயமாக இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்த அஸ்வின் இந்தத் தொடரில் நீக்கப்பட்டு கேஎல் ராகுலை புதிய கேப்டனாக நியமித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லை ரூ.10 கோடிக்கும், வெஸ்ட் இண்டீஸின் வேகப்பந்துவீச்சாளர் காட்ரலை ரூ.8.5 கோடிக்கும் ஏலம் எடுத்தது. இவர்களை தவிர கிறிஸ் ஜோர்டான் மற்றும் நியூசிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் ஆகியோரையும் பஞ்சாப் அணி எடுத்தது.

இந்தமுறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு உள்நாட்டு வீரர்களான ரவி பிஷ்னோய், பிரப்சிம்ரன் சிங், தீபக் ஹூடா, இஷான் போரேல், தஜீன்தர் திலான் ஆகியோரை புதிதாக ஏலத்தில் எடுத்து அணியில் சேர்த்துள்ளது. பல திறமையாளர்கள் இருந்தும் அணியில் இருக்கும் தொடர் குழப்பம் சரியான தலைமை இல்லாதது, திட்டமிடல் இல்லாமை, போதிய ஒருங்கிணைப்பின்மை ஆகியவைதான் பஞ்சாப் அணியின் பெரும் பலவீனமாக பார்க்கப்படுகிறது. மேலும் பஞ்சாப் அணியின் நிர்வாகம் பல முறை போட்டி தொடரிலேயே திடீரென கேப்டன்களை மாற்றும் பழக்கம் கொண்டதும் இதற்கு காரணம்.

இவர்கள் ஜொலித்தால் !

பஞ்சாப் அணிக்கு புதிய தலைமை கிடைத்திருக்கிறது. அதாவது கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அசத்தினார் ராகுல். மேலும் கோலி, ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் கேப்டன் பொறுப்பையும் ஏற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் ராகுலின் பேட்டிங்கும், கேப்டன்ஷிப்பும் "வேற லெவலில்" இருந்தால் கோப்பை நிச்சயம் பஞ்சாப் வசமாகும். அதேபோல ராகுலுடன், கிறிஸ் கெயிலும் பேட்டிங்கில் சோபிக்க வேண்டும். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 490 ரன்களை குவித்தார். இந்தாண்டு எப்படி விளையாடுவார் 40 வயதான கிறிஸ் கெயில் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதேபோல ரூ. கோடி கொடுத்து கிளென் மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு ஏலத்துக்கு எடுத்துள்ளது பஞ்சாப் அணி. காயம் காரணமாக ஐபிஎல் தொடர் தொடங்கி 10 நாள் கழித்தே பஞ்சாப் அணியில் நுழைவார் மேக்ஸ்வெல் என கூறப்படுகிறது. 2014 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார் மேக்ஸ்வெல். அந்தாண்டு தொடரில் மட்டும் 552 ரன்களை குவித்தார், ஸ்ட்ரைக் ரேட் மட்டும் 187.75. மேலும் ஐபிஎல் தொடரின் நாயகன் பட்டத்தையும் வென்றார் மேக்ஸ்வெல். அதேபோன்ற ஆட்டத்தை இப்போது வெளிப்படுத்தினால் கோப்பை பஞ்சாப் கையில்.

பேட்டிங் மட்டும் இருந்தால் போதுமா ? பஞ்சாப் அணியின் ஸ்டார் பவுலர்கள் மூவர். அதில் கிறிஸ் ஜார்டன், முகமது ஷமி மற்றும் காட்ரெல். வேகப்பந்து வீச்சை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். சுழற்பந்துவீச்சில் முருகன் அஸ்வின், இளம் வீரர் ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள். புதுக் கேப்டன் ராகுலின் சொல்படி அணி நிர்வாகம் நடந்தால் இந்தாண்டு ஐபிஎல் கோப்பை பஞ்சாப் அணி வசமாகலாம், முந்தைய கேப்டன்களுக்கு நிகழ்ந்தது போல அணி நிர்வாகம் கேப்டன்ஷிப்பில் மூக்கை நுழைத்தால், இந்தாண்டும் பஞ்சாப் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com