நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஜோ ரூட் அதிவேக சதம் ஒன்றை விளாசியதை அடுத்து, விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் நெடுநாள் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையிலும் 553 ரன்களை குவித்தது. டேரில் மிட்செல் மற்றும் டாம் பிளெண்டல் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியதால் இவ்வளவு பெரிய ஸ்கோரை குவித்தது நியூசிலாந்து அணி.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் 3வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த ஜோ ரூட், ஒல்லி போப் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடினர். போப் சதமடித்து 145 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகி வெளியேற, மறுபக்கம் வெறும் 116 பந்துகளை சந்தித்து சதம் விளாசி அதகளம் செய்தார் ஜோ ரூட். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிவேக சதம் இதுவாகும்.
தொடர்ந்து அதிரடியாகவே விளையாடி வரும் ஜோ ரூட் 163 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார். இரட்டைச் சதம் நோக்கி பயணிக்கும் அவருக்கு அது கைகூடுமா என்பது இன்று தெரியவரும். இந்நிலையில் இந்த சதத்தின் மூலம் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் நெடுநாள் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார் ஜோ ரூட்.
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவரும் தலா 27 டெஸ்ட் சதங்களை குவித்துள்ள நிலையில், அவர்களுடன் அந்த சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். ரன் மிஷின்களாக வர்ணிக்கப்பட்ட விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவரும் வருடக்கணக்கில் சதம் அடிக்காமல் ரசிகர்களை சோதித்து வரும் நிலையில், ஜோ ரூட்டின் ரன் மிஷின் மட்டும் நிற்காமல் சதங்களை வாரிக் குவித்து வருகிறது. ஒன்றரை ஆண்டுகளில் அதாவது 18 மாதங்களில் ஜோ ரூட் விளாசியுள்ள சதங்களின் எண்ணிக்கை மொத்தம் 10 என்பது குறிப்பிடத்தக்கது.