இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி நிதானமாக ஆடி வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயி-யில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி, 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ், 91 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி (Tim Southee) 4 விக்கெட்டுகளும் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும் கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. நிதானமான ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவிலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ் டெய்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த வால்டிங்கும் கிராண்ட் ஹோம் தலா அரைசதம் எடுத்து ஆடி வருகின்றனர். மூன்றாம் நாள் குளிர்பான இடைவேளைவரை அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. வால்டிங் 55 ரன்களுடனும் கிராண்ட் ஹோம் 59 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.