இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விடுவிக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற 2 போட்டிகளில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவதில் இந்தியாவும் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து அகமதாபாத் நகரில் நடைபெற்ற 3ஆவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது. இதனையடுத்து 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பதிவில் "சொந்தக் காரணங்களுக்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் விளையாட முடியாத சூழல் இருப்பதாகவும் அதனால் அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பும்ரா கேட்டுக்கொண்டார். அதனால் கடைசிப் போட்டியில் அவர் விளையாடமாட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.