இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக முக்கிய பல போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை போட்டியை தவறவிட்டார். இதனிடையே பும்ராவுக்கு நியூசிலாந்தில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் பங்கேற்கவில்லை. ஜூன் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா விளையாடுவது சந்தேகம்தான்.
இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பும்ராவின் நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், 'முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு நியூசிலாந்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பும்ராவுக்கு தற்போது வலி எதுவுமில்லை. மருத்துவக் குழுவின் ஆலோசனைபடி அறுவை சிகிச்சை முடிந்த 6 வாரத்துக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு பழைய உடற்தகுதியை எட்டுவதற்கான பயிற்சி திட்டத்தை பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இருக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.