பும்ராவின் பந்துவீச்சு அடிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்றும் அவர் பந்துவீச்சில் கவனமாக ஆட வேண்டும் என்று நியூசிலாந்து வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில், முதலாவது அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மிரட்டுவார் என்றும் அவர் பந்துவீச்சில் கவனமாக ஆட வேண்டும் என்றும் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘’இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, பெரிய ஸ்கோரை இலக்காக வைத்தது. நியூசிலாந்து அதை நினைவில் வைத்து, ஆட வேண்டும். இப்போதைய நிலையில் பும்ராவின் பந்து அடிக்க முடி யாத நிலையில் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக பந்துவீசினார். ஆனால், அவரை விட்டு விட்டு இங்கிலாந்து வீரர்கள், மற்ற பந்துவீச்சாளர்களை தாக்கினார்கள். அதையே நியூசிலாந்து பின்பற்ற வேண்டும். சுழல் பந்துவீச்சுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.
ஆரம்பத்திலேயே துல்லியமாகப் பந்துவீசி, இந்திய வீரர்களின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும். ரோகித், விராத் விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி கொடுக்க வேண்டும். பிறகு நிலையற்ற நடுவரிசையை சாய்த்துவிடலாம். இந்திய அணி, ஆரம்பத்தில் மெதுவாக விளையாடுவதாகக் கூறுகிறார்கள். உண்மையிலேயே, அவர்கள் நிலைத்து நின்றுவிட்டால் கட்டுப் படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிடுவார்கள். டிரென்ட் போல்ட்டுக்கு இந்திய அணி பற்றி நன்றாகத் தெரியும். அவர் மேஜிக்கை நிகழ்த்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.