டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பவர்கள் இலங்கையின் முரளிதரன் (800), ஆஸ்திரேலியாவின் வார்னே (708) மற்றும் இந்தியாவின் கும்ப்ளே (619) ஆகிய சுழற் பந்து வீச்சாளர்கள் தான்.
இந்நிலையில் 600 விக்கெட் மைல் கல்லை எட்டிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்ட இங்கிலாந்தின் வேகப்புயல் ஜேம்ஸ்ஆண்டர்சனுக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவை உள்ள நிலையில் மழையினால் அந்த வாய்ப்பு தடைப்பட்டுள்ளது.
தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானோடு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது போட்டியின் ஐந்தாவது நாளான இன்று போட்டி மழையினால் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி இந்த தொடரில் 1-0 என முன்னிலை வகித்து வருகிறது.
மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒட்டுமொத்தமாக 599 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
எப்படியும் இந்த போட்டியில் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார் என எதிர்பார்த்த சூழலில் மழையினால் அது தடைப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் ஆண்டர்சன் பந்து வீச்சில் எட்ஜான கேட்ச்களை இங்கிலாந்து வீரர்கள் பிடிக்க தவறியதும் அவர் 600 விக்கெட்டுகளை எட்ட முடியாததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 38 வயதாகும் ஆண்டர்சன் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் பவுலராகவும், வெளிநாடுகளில் நடக்கின்ற போட்டிகளில் இங்கிலாந்தின் பவுலிங் கோச்சாகவும் செயல்படலாம் என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் சூழல் ஜாம்பவான் ஷேன் வார்னே.