ஒரு கட்டத்தில் 200+ ரன்களை நோக்கி பயணித்த அணியை தன் சிறப்பான பவுலிங் சுழற்சி மூலம் தடுத்து நிறுத்தினார் லக்னோ கேப்டன் ராகுல். இந்த ஆட்டத்தில் மொத்தம் எட்டு பேரை பந்துவீச பயன்படுத்தி இருந்தார் ராகுல்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் ஓப்பனர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். மோசின் கான் வீசிய முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசி தொடர்ச்சியாக ராஜஸ்தான் ரன் கணக்கை துவங்கினார் ஜெய்ஸ்வால்.
சமிராவின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய பட்லர், ஆவேஷ் கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த சாம்சனும் அதிரடி ஆட்டத்தை கையிலெடுக்க, ஜெய்ஸ்வால் தனது அதிரடியை தொடர்ந்தார். சமீரா வீசிய 6வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி அசத்தினார் ஜெய்ஸ்வால். இதனால் 6 ஓவர்களில் 50 ரன்களை எளிதாக கடந்தபடி பயணித்தது ராஜஸ்தான்.
ஏதுவான பந்துகளில் மட்டும் பவுண்டரிகளை விளாசி வந்த சாம்சன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டரிடம் சிக்கி வெளியேறினார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் தன் பங்குக்கு ஸ்டாய்னிஸ் வீசிய ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாச ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரது அதிரடி ஆட்டத்தின் விளைவால் 11 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது ராஜஸ்தான்.
ஆனால் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் பதோனி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடி காட்டிய படிக்கலும் 39 ரன்கள் எடுத்த நிலையில் பிஷ்னாய் பந்துவீச்சில் நடையைக் கட்ட ராஜஸ்தான் அணி தள்ளாடத் துவங்கியது. அடுத்து வந்த நீசம் அதிரடி காட்ட, ரியான் பராக் நிதானமாக விளையாடினார். ஆனால் பிஷ்னாயிடம் சிக்கி பராக் வெளியேற, அதே ஓவரில் நீசம் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
மிக முக்கிய டெத் ஓவர்களில் ஜோடி சேர்ந்த அஸ்வின், போல்ட் அதிரடியாக ஆடியதால் ஸ்கோர் அதே வேகத்தில் பயணித்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது ராஜஸ்தான் அணி. ஒரு கட்டத்தில் 200+ ரன்களை நோக்கி பயணித்த அணியை தன் சிறப்பான பவுலிங் சுழற்சி மூலம் தடுத்து நிறுத்தினார் லக்னோ கேப்டன் ராகுல். இந்த ஆட்டத்தில் மொத்தம் எட்டு பேரை பந்துவீச பயன்படுத்தி இருந்தார் ராகுல். தற்போது 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.