ஜெய்ஸ்வால், ஹெட்மேயர் அபார ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
இன்று நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி தரப்பில் தவானும் பேர்ஸ்டோவும் களமிறங்கினர். ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி பஞ்சாப்பின் ரன்கணக்கை துவக்கினார் பேர்ஸ்டோ. இருவரும் இணைந்து பவுண்டரி , சிக்ஸர்களாக விளாச அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறத் துவங்கியது.
ஆனால் அஸ்வின் சுழலில் சிக்கி தவான் அவுட்டாக, பனுகா ராஜபக்சே களமிறங்கினார். இருவரும் இணைசேர்ந்து பஞ்சாப் பவுலிங்கை பதம்பார்க்க, 10 ஓவர்களில் 88-1 என்ற நிலையில் வலுவாக ரன் குவித்து இருந்தது பஞ்சாப். ஆனால் இந்த கூட்டணியை தன் சுழல் மூலம் தகர்த்தெறிந்தார் சாஹல். அவர் வீசிய பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார் பனுகா. அடுத்து வந்த கேப்டன் மயங்க் அகர்வால் பொறுப்பாக விளையாடிய நிலையில், மறுபக்கம் 35 பந்துகளை மட்டும் சந்தித்து அரைசதம் விளாசினார் பேர்ஸ்டோ.
நிலைப்பெற துவங்கிய இந்தக் கூட்டணிக்கும் வில்லனாக வந்தார் சாஹல். அவர் வீசிய சுழலில் சிக்கி மயங்க் அகர்வால் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின் தொடர்ந்து பேர்ஸ்டோவும் சஹாலிடம் சிக்கி எல்பிடபுள்யூ ஆகி வெளியேற பஞ்சாப் அணி தடுமாறத் துவங்கியது. மிக முக்கிய டெத் ஓவர்களில் கூட்டணி சேர்ந்த லிவிங்ஸ்டனும் ஜித்தேஷ் சர்மாவும் பொறுப்பாக விளையாடி, ஏதுவான பந்துகளில் மட்டும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர்.
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஓப்பனர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். சந்தீப் ஷர்மா வீசிய முதல் ஓவரில் பவுண்டரி விளாசி ரன் கணக்கை துவக்கினார் ஜெய்ஸ்வால். மிக அதிரடியாக ஜெய்ஸ்வால் வெளுத்துக் கட்ட, பட்லரும் அதிரடியை துவக்க பவர்பிளே பஞ்சாப் கரங்களை விட்டு விலகத் துவங்கியது.
5 பவுண்டரி, ஒரு சிக்ஸர்கள் விளாசி 30 ரன்கள் சேர்த்த பட்லரை அவுட்டாக்கினார் ரபாடா. அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் இணைந்து ஜெய்ஸ்வால் தன் அதிரடியை தொடர்ந்தார். சாம்சனும் தன் பங்குக்கு அதிரடி காட்டி பவுண்டரிகளாக விளாச, 10க்கு குறையாத ரன் ரேட்டில் பயணித்தது ராஜஸ்தான். ஆனால் ரிஷி தவானிடம் சிக்கி, சாம்சன் 23 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த படிக்கல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அதிரடியை தொடர்ந்த ஜெய்ஸ்வால் 33 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். ரிஷி தவான், ராகுல் சஹார் வீசிய ஓவர்களை இந்த இருவர் கூட்டணி வெளுத்தெடுத்தனர். இந்நிலையில் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் சிக்கி ஜெய்ஸ்வால் 68 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மேயர் படிக்கலுடன் இணைந்து நிதான ஆட்டத்தை விளையாடத் துவங்கினார்.
அர்ஸ்தீப் சிங் வீசிய ஓவரில் ஹெட்மேயர் 2 சிக்ஸர்களை விளாச, இலக்கை நோக்கி எளிதாக பயணிக்க துவங்கியது ராஜஸ்தான். ரபாடா ஓவரில் ஹெட்மேயர் பவுண்டரி சிக்ஸர் விளாசி அதிரடியை காட்ட, அர்ஸ்தீப்பிடன் சிக்கி படிக்கல் அவுட்டாகி வெளியேறினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தையே வைடு பாலாக வீசினார் ராகுல் சஹார். ஹெட்மேயர் அடுத்த பந்தை சிக்ஸராக விளாசினார். அடுத்து ஒரு ரன் எடுத்து ராஜஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் ஹெட்மேயர். இந்த வெற்றியின் மூலம் தன்னுடைய பிளே ஆஃப் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் பிரகாசப் படுத்தியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் உள்ளது.
ராஜஸ்தானின் வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி!