பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை நடைபெற்றால் அதில் இந்திய அணி பங்கேற்காது என்ற ஜெய் ஷாவின் கருத்து இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதை பாதிக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிலளித்துள்ளது.
2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மகளிருக்கான ஐபிஎல் தொடரை துவங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கவும், அப்படி இல்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷாவின் கருத்து ஆச்சர்யமளிப்பதாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “அடுத்த ஆண்டு ஆசிய கோப்பையை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா நேற்று தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆச்சரியத்துடனும் ஏமாற்றத்துடனும் பார்க்கிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்களின் அமோக ஆதரவுடனும் ஒப்புதலுடனும் பாகிஸ்தானுக்கு ஆசியக் கோப்பை தொடரை நடத்த அனுமதி வழங்கப்பட்டபோது, அந்த கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஜெய் ஷா பிறகு, ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கருத்துகளின் ஒட்டுமொத்த தாக்கம் ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகங்களை பிளவுபடுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்றுவரை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரின் அறிக்கையையும் தற்போது வரை பெறவில்லை. எனவே, இந்த முக்கியமான விஷயம் தொடர்பாக கூடிய விரைவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.” என தனது அறிக்கையில் அவ்வாரியம் தெரிவித்துள்ளது.