தியோதார் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய பி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ராஞ்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய சி அணியும், பி அணியும் பலப்பரீட்சை மேற்கொண்டன. முதலில் பேட் செய்த இந்திய பி அணி, 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்தது. கேதர் ஜாதவ் 86 ரன்களும் ஜெய்ஸ்வால் 54 ரன்களும் விஜய் சங்கர் 45 ரன்களும் கிருஷ்ணப்பா கவுதம் 10 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர். சி அணி சார்பில் இஷான் பொரெல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து விளையாடிய இந்திய சி அணி, 50 ஓவர்கள் முடிவில் 232 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய பி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியில் அதிகப்பட்சமாக கார்க் 74 ரன்கள் எடுத்தார். பி அணியின் நதீம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.