யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் நேற்று பெற்ற வெற்றிகள் மூலம் இத்தாலி, நெதர்லாந்து, வேல்ஸ் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளன.
யூரோ கோப்பை காலல்பந்தாட்டப் போட்டியில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலி அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பில் கோலை நோக்கி அடிக்கப்பட்ட பந்தை துள்ளிக்குதித்து தன்வசப்படுத்திய இத்தாலி அணியின் கேப்டன் ஜியார்ஜியோ செலினி அதனை அதிரடியாக கோல்வலைக்குள் அடித்தார். ஆனால் வீடியோ நடுவரின் உதவியுடன் இதனை மறுபரிசீலனை செய்ததில் பந்து செலினி கையில் பட்டது தெரியவந்ததால் அது கோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
26-வது நிமிடத்தில் இத்தாலி அணி முதல் கோல் அடித்தது. சக வீரர் டொமினிகோ பிரார்டி கடத்தி கொடுத்த பந்தை இத்தாலி அணியின் மானுவல் லோகாடெல்லி கோலாக்கினார். 52-வது நிமிடத்தில் மானுவல் லோகாடெல்லி மீண்டும் ஒரு கோல் அடித்தார். 89-வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் சிரோ இம்மொபிள் இன்னொரு கோல் போட்டார். முடிவில் இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலம் இத்தாலி நாக்-அவுட் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் நெதர்லாந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின. முதல் பாதியின் 11 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டெபே முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதியின் முடிவில் 1-0 என நெதர்லாந்து முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 67 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டென்சல் டம்டிரிஸ் ஒரு கோல் அடித்தார். இறுதியில், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறியது.
அதேபோல துருக்கியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற வேல்ஸ் அணியும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெற்றது. யூரோ கோப்பையில் நேற்று நடைபெற்ற மற்ற ஆட்டடங்களில் பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. அதேபோல நார்த் மாசிடோனியா அணியை 2-1 என்ற கோல் கண்க்கில் உக்ரைன் வென்றது.