ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நடக்க வாய்ப்பிருப்பதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரகமம், நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முடிவு பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்க கோரி மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் " ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் இன்னும் 10 நாளில் நடைபெற இருக்கிறது. இப்போதைக்கு ஐபிஎல் தொடரின் 60 போட்டிகளையும் அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் " ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராக நம்முடைய வீரர்களுக்கு மூன்று அல்லது நான்கு வாரங்களாவது தேவைப்படும். எனவே போட்டிகள் குறித்த அட்டவனையை விரைந்து முடிப்போம். அப்போதுதான் வீரர்களுக்கு தயாராக நேரம் கிடைக்கும்" என்றார்.