நான் கேப்டனாக இருந்தாலும் ஒவ்வொரு வீரரும் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர் என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா அபாரமாக விளையாடி 5-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டி தொடரின் நாயகனாக கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. நேற்றையப் போட்டியில் ரோகித் சர்மாதான் கேப்டனாக இருந்தார். ஆனால் அவர் பேட்டிங் செய்யும்போது எதிர்பாராதவிதமாக காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தன் வசமாக்கினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எல்.ராகுல் " எனக்கு அளிக்கப்படும் சவால்களை இப்போது விரும்ப ஆரம்பித்துள்ளேன். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் அணியில் இல்லாத நிலையில் நாங்கள் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. அனுபவம் வாய்ந்த இருவரும் மைதானத்தில் இல்லாததால் நிறைய கேள்விகள் எழுந்தன. நான் கேப்டனாக இருந்தாலும் எல்லோரும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து விளையாடினார்கள்" என்றார்.
மேலும் தொடர்ந்த ராகுல் " பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிப்பார்கள் என்று நம் பவுலர்களுக்கு தெரியும். ஆனால் அப்போதும் புதுப்புது யுக்தியை கையாண்டார்கள். இதுபோன்ற செயல்பாடுகள்தான் டி20 போட்டிகளுக்கு முக்கியம். விராட் கோலி இல்லாமல் விக்கெட் கீப்பிங் பணியில் ஈடுபட்டுக்கொண்டு, என்னால் பெரியளவில் ஏதும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் பவுலர்களுக்கு யோசனையை கூற முடியாது. எனினும் பவுலர்கள் திறம்பட செயல்பட்டு வெற்றியை வசமாக்கினார்கள்" என்றார் அவர்.