வங்கதேசம் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் இருக்கும் ஜஹூர் அகமது சவுதரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றுள்ளது. இந்நிலையில் 3ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச தீர்மானித்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதில் ரோகித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷனும், தீபக் சஹாருக்கு பதில் குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.
இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க மறுபுறம் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் இஷன் கிஷன். இதில் கோலி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். அதன் பலனாக 85 பந்துகள் எடுத்திருந்தபோது 102 ரன்களை அடித்து அசத்தினார். பின்பு விராட் கோலியும் அரை சதமடித்தார்.
சதமடித்த பின்பு இன்னும் உக்கிரமாக விளையாடி வரும் இஷான் கிஷன் 116 பந்துகளில் 184 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதில் அவர் 21 பவுண்டரிகள் 9 சிக்ஸர்களை விளாசி தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய அணி இப்போது வரை 31 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களை எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.