உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்ள மறுக்கப்பட்ட தடகள வீரர் ஐசக் மக்கவாலா ஃபேஸ்புக்கில் கொந்தளித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் போட்ஸ்வானாவைச் சேர்ந்த தடகள வீரர் ஐசக் மக்கவாலா கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசக் மக்கவாலா உடல்குறைவுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, ஏற்கனவே 800 மீட்டர் ஓட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் 400 மீட்டர் ஓட்டத்தில் அவர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்தார். அவரால் பிற வீரர்களுக்கு நோய் தொற்றக் கூடும் என கருதியதால் போட்டியில் கலந்து கொள்ள சர்வதேச தடகள சம்மேளனம் அனுமதி மறுத்தது.
எனினும், போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என மைதானத்திற்குள் சென்ற அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தமக்கு எந்த உடல்நலக்குறைவும் இல்லை என்றும், போட்டிக்கு முன்னால் தம்மை எந்த மருத்துவரும் பரிசோதிக்கவில்லை என்றும் மக்கவாலா கூறினார்.
இது குறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்குமோ என சில வீரர்கள் சந்தேகமடைந்துள்ளனர். இதனிடையே, மேலும் சில வீரர்-வீராங்கனைகளுக்கும் நோய்தொற்று இருக்கலாம் என்றும் அச்சம் எழுந்திருக்கிறது.