முடிவுக்கு வருகிறதா மும்பையின் சகாப்தம்! என்னதான் ஆச்சு சாம்பியன் டீமுக்கு? - ஓர் பார்வை
ஐபிஎல் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 8 தோல்விகளை சந்தித்துள்ளது. இன்னும் புள்ளிப்பட்டியலில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியும் அதுதான்!
நடப்பு ஐபிஎல் சீசனில் ஐந்து முறை சாம்பியனான அணியானது, ஒவ்வொரு ஆட்டத்திலும் நூற்றுக்கணக்கான கவலைகளுடன் திணறி வருகிறது. அறிமுக அணிகளின் கூடாரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்ட, கப்சிப்பென்று அடங்கிப் போயிருக்கிறது சாம்பியன் அணியான மும்பையின் கொட்டகை. லக்னோ கேப்டன் ராகுல் தொடர்ந்து இரண்டு முறை மும்பையை பரிதாபத்துக்குள்ளாக்கியுள்ளார். ஒரே நல்ல அம்சம் என்னவென்றால், இந்த சீசனில் மும்பை லக்னோவை மீண்டும் எதிர்கொள்ள வேண்டியதில்லை. தொடர்ச்சியாக எட்டு தோல்விகளைப் பெற்று விட்டது என்பதால் மும்பை கிட்டதட்ட பிளே ஆஃப் சுற்றை விட்டு வெளியேறிவிட்டது. சாம்பியன் அணி என்று வர்ணிக்கப்பட்ட மும்பை எங்கெல்லாம் சறுக்கியது என்பதை பார்ப்போம்.
ஐபிஎல் ஏலத்திலேயே மும்பை அணியின் பிரச்சினை துவங்கி இருக்கிறது, அதை கவனிக்கும் முன்பாக மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விகளை வாரிக் குவிக்கத் துவங்கி விட்டது. ஏலத்தில் இஷான் கிஷனுக்கு மும்பை அதிகமாகச் செலவு செய்தது. அந்த அதிக விலைதான் தற்போது அவரது ஆட்டத்தை பாதித்து விட்டதாக பேசப்படுகிறது. முதல் இரு ஆட்டங்களில் அரைசதம் விளாசிய இஷான், அடுத்த ஆறு ஆட்டங்களில் 26 ரன்களைக் கூட தாண்டவில்லை. எட்டு போட்டிகள் விளையாடி உள்ள இஷான் கிஷானின் சராசரி 28.43, ஸ்டிரைக் ரேட் 108.15 மட்டுமே.
அடுத்து நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் கேப்டன் ரோகித் ஷர்மா அணியின் முக்கியப் பிரச்சினை. 8 போட்டிகளில் அவர் குவித்த ரன்கள் 153 தான். சராசரி 19.12. இதில் இரு டக் அவுட்களும் அடக்கம். ஓப்பனிங் ஜோடி சொதப்பலை துவக்கி வைக்க, அது அணியை தோல்விக்கு அழைத்துச் சென்று விடுகிறது. அடுத்து வரும் டெவால்ட் ப்ரெவிஸ், திலக் வர்மா, சூர்ய குமார் யாதவ் மூவரும் சிறப்பாக சில போட்டிகளில் விளையாடினாலும், “பார்ட்னர்ஷிப்” உருவாக்குவதில் கோட்டை விட்டு விடுவது அணியின் ஸ்கோரை உயர்த்த விடாமல் தடுத்து விடுகிறது.
ஒருவர் தனியாளாக அதிரடி காட்ட, மற்றவர்கள் பெவிலியனுக்கு ஃபேஷன் ஷோ நடத்த துவங்குவதால், நன்றாக ஆடிக் கொண்டிருந்தவர் ஆட்டமும் ஆட்டம் கண்டு விடுகிறது. போட்டிகளில் அதிரடியையும், தடுப்பாட்டத்தையும் கலந்து விளையாடும் போது அது எதிரணிக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் இவர்கள் மூவரும் அதிரடியை பிரதானமாக்குவது, எதிரணிக்கு போனஸாக அமைந்து விடுகிறது. எளிதில் கணிக்கும் அளவுக்கு இவர்கள் தொடர்ந்து விளையாடுவதை மாற்றி “பார்ட்னர்ஷிப்”களை உருவாக்காதவரை மும்பைக்கு வெற்றி எட்டாக்கனி தான்!
அடுத்த பிரச்சினை மும்பையின் பவுலர்கள். “Defend low score at any time" என்பதை தனது டைட்டில் கார்டாக வைத்த மும்பை அணியின் பவுலிங் “பரிதாப” நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. நம்பர் ஒன் பவுலர் பும்ராவே 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருப்பது அணியின் பவுலிங் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு உதாரணம். வழக்கமாக பும்ரா- போல்ட் கூட்டணி விக்கெட்டுகளை லட்டு போல அள்ளி விடுவார்கள். போல்ட் ஏலத்தில் வேறு அணிக்கு கைமாற, அந்த இடத்திற்கு சரியான நபரை தேர்வு செய்ய அணி நிர்வாகம் தவறியதால் பும்ராவில் ஸ்பெல் எடுபடவில்லை.
முருகன் அஸ்வின், உனத்கட், பசில் தம்பி, டைமல் மில்ஸ் என பல பவுலர்கள் ஒரு போட்டியில் சிறப்பாக பந்துவீசி விட்டு, அடுத்த போட்டியில் அணி நிர்வாகத்துக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பந்துவீசி விடுகின்றனர். மும்பை, புனே ஆடுகளங்களுக்கு ஏற்ற சுழற்பந்து வீச்சாளரை ஏலத்திலேயே மும்பை எடுக்கத் தவறியதால், மிடில் ஓவர்களில் சிக்கனமாக பந்துவீச ஆட்கள் இல்லை. அடுத்த சீசன்தான் ஆர்ச்சர் வருவார் என்பதால் பும்ராவுக்கான வேகப்பந்து கூட்டணியும் காலியாகவே தொடர்கிறது.
ஆல்ரவுண்டர்களான பொல்லார்ட், டேனியல் சாம்ஸ் ஆகியோர் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பிரகாசிக்கத் தவறுவதால், மும்பை அணி முழுமையாக தோல்வி எனும் இருட்டிற்குள் சென்று விட்டது. அந்த இருட்டின் நீட்சி நேற்றைய போட்டியிலும் தொடர, அணிக்கு அது எட்டாவது தோல்வி. தொடர்ந்து 8 போட்டிகளில் தோற்பது மும்பைக்கு இது முதல் முறை.
தோல்விக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, “பேட்டிங் செய்ய நல்ல ஆடுகளமாக இருந்தது. அந்த ஸ்கோரை விரட்டியடிக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் நாங்கள் போதுமான அளவு சரியாக பேட்டிங் செய்யவில்லை. உங்களுக்கு அப்படி ஒரு இலக்கு இருக்கும்போது, பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவது முக்கியம். ஆனால் நடுவில் சில பொறுப்பற்ற ஆட்டங்கள் என்னுடையது உட்பட. எங்களுக்கு வேகம் கிடைக்கவில்லை. லக்னோ நன்றாக பந்து வீசினார்கள். இந்த போட்டியில் நாங்கள் போதுமான அளவு பேட்டிங் செய்யவில்லை.
நடுவில் யார் ஆடினாலும் அந்த பொறுப்பை ஏற்று நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும். எதிரணி வீரர்கள் சிலர் அதைச் செய்திருக்கிறார்கள், அதுதான் எங்களுக்குப் பாதகமாக இருக்கிறது. எங்களிடம் ஒரு நிலையான அணி இருப்பதை உறுதிசெய்து, நடுவில் உள்ள வீரர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும். நாங்கள் பல மாற்றங்களைச் செய்யாமல் முயற்சித்தோம். என்னைப் பொறுத்த வரை, வீரர்கள் தங்களை நிரூபிக்க போதுமான வாய்ப்புகளை வழங்க விரும்புகிறேன். சீசன் நாம் விரும்பியபடி செல்லவில்லை, ஆனால் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன.” என்று தெரிவித்தார்.
மும்பை அணி தவறு செய்த இடங்களை எல்லாம் சரிசெய்து, அற்புதமான விளையாடினால் பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு மிக மிகக் குறைவே.! ஆனால் பிளே ஆஃப் வாய்ப்பை நோக்கி செல்லும் அணியை பின்னுக்கு இழுக்க மும்பையால் முடியும். கேஜிஎஃப்2 படத்தில் பிரகாஷ் ராஷ் பேசும் ஒரு வசனம் வரும். “ராக்கியோட கேஜிஎஃப்பை அழிக்க ஒருத்தனால தான் முடியும். அது ராக்கிதான்”. அதைப்போல தான் பிரமாண்ட சாதனைகளை நிகழ்த்திய மும்பை அணி அவற்றை காலி செய்து கேலி பேசும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இனியாவது ஃபினிக்ஸ் பறவையாய் மீண்டெழுமா மும்பை? அந்த அணியில் அடுத்தடுத்த நகர்வுகள் அதற்கான விடையை சொல்லும்!