அடிலெய்ட் தோல்வி... இந்திய அணிக்கான எச்சரிக்கை மணியா?

அடிலெய்ட் தோல்வி... இந்திய அணிக்கான எச்சரிக்கை மணியா?
அடிலெய்ட் தோல்வி... இந்திய அணிக்கான எச்சரிக்கை மணியா?
Published on

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகள் அயல் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடும்போது தோல்வியை தழுவுவது சகஜம்தான். இருப்பினும் அந்த தோல்வி வெற்றிக்காக ஒரு அணி இறுதி வரை போராடி வீழ்ந்திருந்தால் ஏற்புடையது. ஆனால் அப்படி இல்லாமல் சரணாகதி என வீழ்ச்சி அடைவதை கிரிக்கெட் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதிலும் நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி என கிரிக்கெட் வெறி ஊறி போய் இருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவர்களது அணி அப்படி ஒரு தோல்வியை தழுவுவதை ஜீரணிக்க கூட முடியாது. அது மாதிரியான ஒரு தோல்வியைதான் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான அடிலெய்ட் டெஸ்டில் பெற்றுள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கிட்டத்தட்ட 96 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்தபட்ச ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல்முறை. அதை தான் இந்தியா செய்துள்ளது. இருப்பினும் இந்த ஒரு தோல்வி கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இந்திய அணியையும், அதன் செயல்பாட்டையும் விமர்சிக்க செய்துள்ளது.

மிடில் ஆர்டரில் சொதப்பியது, மிஸ் ஃபீல்டிங் மற்றும் கேட்ச் வாய்ப்பை வீணடித்தது என அடிலெய்ட் தோல்விக்கான காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அதெல்லாம் வீரர்களை நோக்கி பாய்கின்ற அஸ்திரங்கள். இப்போது பிரம்மாஸ்திரமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியை நோக்கி பாய ஆரம்பித்துள்ளது. 

ரவி சாஸ்திரி : தலைமை பயிற்சியாளர்

“இந்த அணியின் சராசரி வயது 26. பன்னிரெண்டு மாதத்தில் பாருங்கள் இந்த அணி உலகின் எந்த பகுதியிலும் திறம்பட விளையாடுகின்ற பக்குவத்தை பெற்று இருப்பார்கள். சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அதில் நிச்சயம் கவனம் செலுத்தப்படும்” என டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்ற உடன் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார். அப்போது அவர் இந்திய அணியின் இயக்குனர். 

தொடர்ந்து சில ஆண்டுகள் அந்த பதவியை அவர் அலங்கரித்து வந்த நிலையில் 2017 இல் முழு நேர பயிற்சியாளரானார். அதன் பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மாதிரியான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட்  தொடர்களில் விளையாடியது. குறிப்பாக அசல் கிரிக்கெட்டின் வடிவம் என சொல்லப்படும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை (2018 - 19) தவிர்த்து இந்திய அணி மற்ற நாடுகளில் தொடரை இழந்துள்ளது. 

இதற்கு சாஸ்திரி முன்னெடுத்த தவறான வியூகங்களையும், அணி தேர்வையும் காரணமாக சொல்லலாம். உதாரணமாக அடிலெய்ட் டெஸ்டில் இடது கை பேட்ஸ்மேன் ஒருவராவது இந்திய அணியில் இந்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு இம்சை கொடுத்திருக்கலாம். இந்த மாதிரியான சின்ன தப்புகள் தான் இந்தியா நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் தொடரை இழக்க காரணம். அதே நாடுகள் இந்தியாவுக்கு வரும் போது இந்தியா தனிக்காட்டு ராஜாவாக ரவுண்டு வந்ததையும் குறிப்பிட வேண்டும். 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரை இழந்தபோதே ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும். அந்த இடத்திற்கு தொழில்முறை சார்ந்த அனுபவம் உள்ள ஒருவரை கொண்டு வர வேண்டுமென கிரிக்கெட் ஆர்வலர்கள் வலியுறுத்தி இருந்தனர். 

ஒரு சிலர் ரவி சாஸ்திரிக்கு மாற்றாக ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங் மாதிரியான கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்களையும் பரிந்துரைத்து வருகின்றனர். இது இந்திய கிரிக்கெட் ஆணையத்தின் காதுகளையும் எட்டி இருக்கலாம். 

ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஓய்வுக்கு பிறகு வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியை கவனிக்க தொடங்கினார். 2016 இல் அவர் அண்டர் 19 அணியை வழிநடத்தும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இஷான் கிஷன், பண்ட், வாஷிங்டன் சுந்தர், பிருத்வி ஷா, சுப்மன் கில், ஷ்ரேயஸ் மாதிரியான வீரர்கள் ராகுல் டிராவிட் இடம் பயிற்சி பெற்றுள்ளனர். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2019இல் சாம்பியன் பட்டத்தையும் வேண்டியுள்ளது. தற்போது அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக உள்ளார். அவரை ஆஸ்திரேலியாவுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரசிகர்களும்  இதை சொல்லி வருகின்றனர். அதேசமயம் “இப்போதைக்கு ஆஸ்திரேலியாவுக்கு யாரையும் அனுப்பும் முடிவில்லை” என ராஜிவ் ஷுக்லா தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் ராகுல் டிராவிட், இந்திய அணியை தலைமை பயிற்சியாளராக வழிநடத்தும் வாய்ப்பை மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார் முன்ளாள் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய். 

ரிக்கி பாண்டிங்

கிரிக்கெட் உலகின் சிறந்த கேப்டன் என சொல்லப்படும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக அவதாரம் எடுத்துள்ளார். டிராவிட் அளவுக்கு  இல்லை என்றாலும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் தனது கோச்சிங் பணியை சிறப்பாக செய்து வருகிறார் பாண்டிங். ஐபிஎல் போட்டிகளில் மும்பை மற்றும் டெல்லி அணியை பாண்டிங் பயிற்சியாளராக வழி நடத்தியுள்ளார். குறிப்பாக 2020 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி பாண்டிங்கின் பயிற்சியின் கீழ் தான் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளேவின் பெயரும் இந்திய அணியின் அடுத்த  பயிற்சியாளராக வேண்டுமென சொல்லப்படுகிறது. இந்த விமர்சனங்களை எல்லாம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் வாரிய குழுவினர் கருத்தில் கொள்ள வேண்டும். 

புதுமை விரும்பியான கங்குலி நிச்சயம் பயிற்சியாளர் விஷயத்தில் அலர்ட்டோடு கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்டுகிறது. அதை மட்டும் செய்யாமல் போனால் இப்போது இல்லை என்றாலும் எப்போதும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கவே முடியாது. இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரொலிக்க தொடங்கியுள்ள நிலை படிப்படியாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கலாம். அதை தவிர்க்க ஒரு பரிசோதனை முயற்சியாக தலைமை பயிற்சியாளரை மாற்ற வேண்டி உள்ளது. 

அதே போல ஐபிஎல் மட்டுமல்லாது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தும் வீரர்களையும் இந்திய தேர்வாணையம் கவனித்தாக வேண்டும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com